குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரை கேட்ட போது , வைத்தியர்கள் கடமையை பொறுப்பேற்காதது தொடர்பில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தனர்.
யாழ்.மாவட்டத்தில் நூற்றுக்குமதிகமான வைத்தியர்கள் தேவைப்படுமிடத்தில் , 43 வைத்தியர்கள் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த முதலாம் திகதி முதல் தமது கடமை பொறுப்பை உறுதி செய்ய வேண்டும். அந்நிலையில் இதுவரை 39 வைத்தியர்களே தமது கடமைகளை பொறுபேற்று உள்ளனர். நால்வர் ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுபேற்க வில்லை.
கடமையை பொறுப்பேற்காத வைத்தியர்கள் , மருதங்கேணி , தொல்புரம் , தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை வைத்திய சாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
குறித்த வைத்திய சாலைகளில் வெளிநோயாளர்கள் பிரிவு உட்பட்ட பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக தினமும் பல நோயாளர்கள் வந்து செல்கின்றனர். அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால் , நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த வைத்திய சாலைகளுக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுபேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.