இரகசியமாக வழங்க நடவடிக்கை? – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தென்னிலங்கையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு உப்பளம் அமைப்பதற்காக கிளிநொச்சிப் பகுதியில் நூறு ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. மத்திய காணி அமைச்சின் அதிகாரிகள், வனவளத்திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மட்ட உயரதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன் அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் உப்பளம் அமைப்பதற்கு நூறு ஏக்கர் காணியை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வனவள திணைக்களத்திற்கு சொந்தமில்லாத குறித்த பிரதேசத்தை வனவளத் திணைக்களம் தங்களுடையது என பிரகடனம் செய்துவிட்டு அதனை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
குறித்த இந்த நடவடிக்கைகளுக்கு மாவட்ட மட்ட அதிகாரிகளும் அரசியல் தரப்புகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர் எனவும் கூறப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்ற காணிகள், கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதனங்கள், குளங்கள் ஜெயபுரம் பிரசேத்தில் மக்களின் வயற்காணிகள் என்பவற்றை வனவளத்திணைக்களம் தங்களுடையது என்றும் அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும் வனவளத்திணைக்களம் இந்த விடயத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு குறித்த பிரதேசத்தில் நூறு ஏக்கர் நிலத்தில் உப்பளம் அமைத்தால் அந்த பிரதேசங்களும் அதனை அண்டிய பிரதேசத்தினதும் நிலங்கள் உவராவதோடு, அதனை அண்டிய பிரதேசங்களில் மக்கள் வாழ்வதும் கேள்விக்குள்ளாகும் எனவும் . இது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இரகசியமாக நூறு ஏக்கர் காணியை தென்னிலங்கை நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் முயற்சியும் பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.