குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்லுண்டாய் வெளி பகுதியில் மல கழிவுகளை கொட்டிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் என தெரியவந்துள்ளது. யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் கடந்த 26ஆம் திகதி பகல் வேளை மல கழிவுகளை கொண்ட முயன்றவர்களை அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் இருவரையும் மல கழிவை ஏற்றி வந்த வாகனத்தையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.மாநகர சபை பணியாளர்கள் என காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து இரு ஊழியர்களையும் பிணையில் விடுவித்த நீதிவான் வாகனத்தை தடுத்து வைத்தார். அத்துடன் வழக்கினை ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அதவேளை கடந்த வாரம் அதிகாலை 12.30 மணியளவில் கழிவுகளை கொண்ட வந்த வாகனத்தை மடக்கி பிடித்த போதிலும் அதில் இருந்த மூவரும் யாழ்,மாநகர சபை பணியாளர்கள் என தெரியவந்தது. அவர்கள் மூவருக்கும் எதிராகவும் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.