கஞ்சா போதைப்பொருளை நுகர்வதற்காக தமது உடமையில் வைத்திருந்த 10 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் தீர்ப்பளித்தார்.
ஒரு கிராமுக்கும் குறைவான கஞ்சாவை உடமையில் வைத்திருந்த 9 பேரின் தண்டனைக் காலம் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், ஒரு கிராமுக்கு அதிகமான அளவில் கஞ்சாவை வைத்திருந்த ஒருவரின் தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிமன்று கட்டளையிட்டது. அத்துடன், குற்றவாளிகள் 10 பேரும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் தண்டம் பணம் செலுத்தவும் மன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா போதைப்பொருளை நுகர்வதற்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை 7 பேரும் செவ்வாய்க்கிழமை 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். அதனால் அவர்களை எச்சரித்த நீதிமன்று, தண்டனைத் தீர்ப்பை வழங்கியது.