Home இலங்கை ஜெனீவா 2019 – நிலாந்தன்…

ஜெனீவா 2019 – நிலாந்தன்…

by admin

‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும்.’ இவ்வாறு கூறியிருப்பவர் கலாநிதி பாலித்த கோகன்ன. வியத்மக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த சனிக்கு முதற்சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அதில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். கலாநிதி பாலித்த கோகன்ன ஒரு புத்திஜீவி. முன்னாள் ராஜதந்திரி. புலிகள் இயக்கத்துடனான ஒஸ்லோப் பேச்சுவார்த்தைகளில் அரச தரப்பின் தலைவராகச் சென்றவர். ஐ.நாவுக்கான இலங்கைத்தீவின் வதிவிடப் பிரதிநிதியாக இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் ஓய்வு பெற்றபின் இவ்வாறு கூறுகிறார். இக்கூற்றை ஓய்வு பெற்ற ஒரு ராஜதந்திரியின் தனிப்பட்ட கூற்றாக எடுத்துக்கொள்வதா? அல்லது சிங்கள ராஜீயக் கட்டமைப்பின் ராஜீய நாகரிக முகமூடிகளை அணிந்திராத இயல்பான தோற்றம் இதுதானா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அசங்க அபயசேகர கொழும்பு ரெலிகிராபில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் அவர் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் மூத்த அலுவலர் ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி இருக்கிறார். ‘நாங்கள் யாரோடும் எந்த விலைக்கும் படுக்கையைப் பகிரக்கூடிய ஒரு பாலியல் தொழிலாளி ஆகி விட்டோம்.’ என்று. அசங்க அபயசேகர பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் தேசியப் பாதுகாப்பு சிந்தனைக் குழாத்தின் பணிப்பாளர் நாயகம் ஆவார். அவர் குறிப்பிடும் வெளி விவகார அமைச்சின் மூத்த அதிகாரி கூறியது பாலித கோகனவின் கூற்றை பிரதிபலிப்பதாகக் காணப்படுகிறது.

ஜெனீவாவில் மட்டுமல்ல புவி முழுவதிலும் ஸ்ரீலங்காவின் ராஜீயக் கட்டமைப்பு அவ்வாறுதான் செயற்பட்டு வருகிறது. 2009ல் ஆயுத மோதல்களை முடிவிற்குக் கொண்டுவந்த போதும் அது அவ்வாறு தான் செயற்பட்டது. அதற்குப் பின்னரும் அதன் விளைவாக ஏற்பட்ட ஒரு புதிய வளர்;ச்சியாகிய ஜெனீவாவை எதிர்கொள்ளல் என்ற அம்சத்திலும் அவர்கள் அப்படித்தான் செயற்பட்டு வருகிறார்கள். அதன் விளைவாகவே கடந்த கிழமை வெளிவந்த ஜெனீவாத் தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் ஒன்றாக அமையவில்லை. அது மட்டுமல்ல அரசாங்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புக்கொண்ட பொறுப்புக்களில் இருந்தும் பின்வாங்குகிறது. பாலித கோகன கூறியது போல.

எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்பக் கூறுவதுண்டு. ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைகளுக்கும், ஐ.நாத் தீர்மானங்களுக்குமிடையே தமிழ் மக்களுக்குப் பாதகமான இடைவெளிகள் உண்டு. இம்முறையும் ஆணையாளர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தினார், கால அவாகாசத்தில் கால அட்டவணையும் கேட்டிருந்தார். அதுமட்டுமல்ல ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜெனீவாவில் உரையாற்றிய திலக் மாறப்பன மேற்படி கோரிக்கைகளை நிராகரித்து விட்டார்.எனினும் 30ஃ1 தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என்று கேட்டு மேலும் ஈராண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கூறின் கடைசியாக வந்த ஜெனிவாத் தீர்மானம் எனப்படுவது 30ஃ1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கும் ஒரு தீர்மானம்தான்.

கலப்பு நீதிமன்றத்துக்கான பரிந்துரை எனப்படுவது புதிய தீர்மானத்திலில்லை. ஆனால் 30ஃ1 தீர்மானத்தில் அதற்குரிய அடிப்படை உண்டு. அத்தீர்மானத்திலுள்ள ஆறாம் இலக்கப் பந்தியில் கொமன் வெல்த் நாடுகளின் நீதிபதிகள் உட்பட வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. பாலித கோகனவும் தனது மேற்சோன்ன பேச்சில் அதைச் சுட்டிக்காட் டுகிறார். அவ்வாறு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு யாப்பில் இடமுண்டா என்பதை ஆராய்வதற்காக 2015 இல் அமெரிக்காவிலிருந்து இரண்டு சட்டத்துறை வல்லுனர்கள் இலங்கைக்கு வந்ததாகவும் இவர்கள் கண்டு பிடித்த விடயத்தைத்தான் இப்பொழுது சுமத்திரன் ஒரு விவகாரமாக ஆக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இங்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. 2015ம் ஆண்டு 30ஃ1 தீர்மானத்துக்கு இணை அணுசரணை வழங்கியதன் மூலம் கலப்பு விசாரணை பொறிமுறைக்கான அடிப்படைகளை ஏற்றுக் கொண்ட அரசாங்கம்; நான்கு ஆண்டுகளின் பின் அதை மறுக்கிறது. அதாவது 30ஃ1 தீர்மானத்திலிருந்து அரசாங்கம் பின் வாங்குகிறது.

கடைசித் தீர்மானத்தில் ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்திலிருந்து நாட்டை விடுவித்தமைக்காக நாட்டின் நீதி பரிபாலனக் கட்டமைப்புக்கு பாராட்டு வழங்கப்படுகிறது. இப்பாராட்டால் கிடைத்த துணிச்சலும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க ஒரு காரணமாகும். எதுவாயினும் ராஜிய மொழியில் கூறினால் அரசாங்கம் தமது கூட்டுப் பொறுப்பிலிருந்து பின் வாங்குகிறது என்று பொருள். பாலித கோகன கூறியது போல.

சிவாஜிலிங்கம் கூறுகிறார் கொலை வழக்கில் கொலைகாரன் பிணையில் நிற்கிறான். வழக்குத் தள்ளுபடி செய்யப்படவில்லையென்று. ஆனால் வழக்கே தொடங்கவில்லை என்பதுதான் தமிழ் மக்களின் முறைப்பாடாகும். இது விடயத்தில் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் ஆற்றிய உரைக்கு எதிர்வினையாற்றிய டிலான் பெரேரா அப்படிக் கதைத்தால் மீண்டும் ஒரு 83 யூலை உருவாகும் என்று எச்சரிக்கிறார். அதாவது கொழும்பில் தமிழ் மக்களுக்கு அடி விழும் என்று வெருட்டுகிறார். ஆனால் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதை ரணில் ஒரு வெற்றியாகக் காட்டுகிறார். இது ஒரு தேர்தல் ஆண்டு. ரணிலைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஐ.நாவுக்கு உண்டு. ஜெனீவாவில் மட்டுமல்ல. உள்நாட்டிலும் அவர்கள் ரணிலைப் பாதுகாப்பார்கள். மேற்கு நாடுகள் தமக்கு விசுவாசமான ஒரு தலைவரை பாதுகாக்கின்றன. ஆனால் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக சிங்கள – பௌத்த அரசுக் கட்டமைப்பைப் பாதுகாக்கின்றது. ஓர் அரசுடைய தரப்பாக இருப்பதனால் எத்தனை வாக்குறுதிகளை மீறினாலும் ஐ.நா அரசாங்கத்தை இப்போதைக்கு தண்டிக்கப் போவதில்லை. ஓர் அரசுடைய தரப்பாக இருப்பதன் அனுகூலம் இது. ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை?

அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் குறைந்தபட்சம் ஒருமித்த தரப்பாகக் கூட ஜெனீவாவில் காணப்படவில்லை என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும். தமிழ் மக்களை யார் ஒருகுடைக்கீழ் திரட்டுவது? அதைத் தாயகத்திலிருந்துதான் செய்ய வேண்டும். ஜெனீவாவை எதிர்கொள்வது என்பதும் உலகத்தை எதிர்கொள்வது என்பதும் பிராந்தியத்தை எதிர்கொள்வது என்பதும் தாயகத்திலிருந்தே திட்டமிடப்பட வேண்டும். ஆனால் இங்கு நிலமை தலைகீழாக இருக்கிறது. ஜெனீவாவை எதிர்கொள்வதும் உலகத்தை எதிர்கொள்வதும் அதிகபட்சம் டயஸ்பொறா பரப்புக்குள் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களாகவே காணப்படுகின்றன. இதில் பிராந்தியத்தில் அதாவது இந்தியாவைக் கையாள்வது என்பதற்கு எந்திவிதமான ஒரு கட்டமைப்புமில்லை. பொறிமுறையுமில்லை.

2009ற்கு முன்பு ஆயுதப் போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள்தான் 2009ற்குப் பின்பு ஜெனீவாவைப் பெருமளவிற்குக் கையாண்டன. 2009ஐ உடனடுத்து வந்த ஆண்டுகளில் தயாகத்தில் யுத்த வெற்றிவாதம் கோலோச்சியது. அதனால் நீதி கோரிய போராட்டங்கள் சிறு திரள் வடிவிலேயே நிகழ்ந்தன. அச்சுறுத்தலான அச்சூழலுக்குள் ஒரு புறம் போராடும் வெளி சிறியதாக இருந்தது. அவமானகரமான ஒரு தோல்விக்குப் பின்னரான கூட்டு உயவியலும் ஒரு தடையாக இருந்தது. இவற்றைவிட முக்கியமாக போராடத் திராணியற்ற கூட்டமைப்பும் ஒரு தடையாக இருந்தது. இன்றளவும் அது தடையாகத்தான் இருக்கிறது.

இப்படிப்பட்டதொரு சூழலில் 2015ல் யுத்த வெற்றிவாதம் கவிழ்க்கப்பட்டது. அதைக் கவிழ்த்ததற்கு கூட்டமைப்பு உரிமை கோருகிறது. தான் ஏற்படுத்திக்கொடுத்த ஜனநாயக வெளிக்குள்தான் மக்கள் போராடி வருகிறார்களென்று சம்பந்தர் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால் அந்த ஜனநாயக வெளியை ஒரு போராட்ட வெளியாகவோ, பரிசோதனை வெளியாகவோ பயன்படுத்தத் திராணியற்ற ஒரு கட்சி அதற்கு உரிமை கோர முடியாது. ஏனென்றால் அது ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஜனநாயக வெளியின் பெறுமதியும் ஆழமும் அக்கட்சிக்கே தெரியாது. அதை அவர்கள் பயன்படுத்தத் தவறியதால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் போராடத் தொடங்கினார்கள். இத்தகையதோர் பின்னணியில் 2015ற்குப் பின் தமிழரசியலை தாயகத்தை மையமாகக் கொண்டு திட்டமிடுவதற்கு உரிய ஓர் அரசியல் சூழல் தோன்றியது. ஆனால் கூட்டமைப்பைப் பிழை என்று கூறும் சக்திகள் அதைப் போதியளவிற்குக் கையாளத் தவறிவிட்டன. இந்த வெற்றிடத்துள் யுத்த வெற்றி வாதமானது மறுபடியும் தாமரை மொட்டு சின்னத்தோடு மேலெழுந்து விட்டது. மகிந்தவின் மீளெழுச்சி ஜெனீவாவில் ரணிலின் பேரத்தை அதிகரித்து விட்டது. அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியானது தமிழ் பேரத்தை உயரவிடவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் இம்முறை ஜெனீவாவில் ஒப்பீட்டளவில் அதிகதொகைச் செயற்பாட்டாளர்களைக் காணமுடிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் ஒருமித்த அணியாக அங்கே காணப்படவில்லை. இம்முறையும் தாயகம் ஒரு சக்திமிக்க மையமாக எழுச்சி பெற்றிருக்கவில்லை. கடந்த ஒன்பதாண்டுகால தலைகீழ்ப் பொறிமுறையின் தொடர்ச்சியை இம்முறையும் காண முடிந்தது.

வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட, வேறுபட்ட நிலையான நலன்களைக் கொண்ட, வேறுபட்ட வேலைத்திட்டங்களைக் கொண்ட, வேறுபட்ட நிதி வழங்குநர்களைக் கொண்ட பல்வேறுபட்ட தரப்புக்களாக தமிழ் மக்கள் சிதறிக் காணப்படுகிறார்கள். ஜனவசியம் மிக்க, உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கின்ற ஒரு தலைமையின் கீழ் அவர்கள் திரட்டப்படவில்லையென்றால் இரண்டாண்டு கால அவகாசம் முடிந்த பின்னரும் ஜெனீவாத் தீர்மானங்கள் முப்பதின்கீழ் ஒன்று தீர்மானம் போட்ட மலட்டுக் குட்டிகளாகவே வெளிவரும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி கூறியிருப்பது போல ஓர் அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் ஆகக் கூடிய பட்சம் நெகிழ்ந்தும் நசிந்தும் சுழித்தும் குத்துக்கரணமடித்தும் தம்மைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களோ அப்படிப்பட்ட ராஜீயக் கட்டமைப்புக்கள் எவையுமின்றி தீர்க்கதரிசனம் மிக்க வெளியுறவுக் கொள்கை எதுவுமின்றி ஐக்கியமின்றி ஜனவசியமிக்க ஒரு தலைமையின்றி ஜெனீவாவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More