207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று(1) திங்கட்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். மன்னார் தட்சணா மருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (வயது-28) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந் நிலையில், தலையில் ஏற்பட்ட வலியைத் தொடர்ந்து மயக்கமடைந்த இவரை மன்னார் மடு வைத்தியசாலைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தலையில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்த வைத்தியர்கள் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதையடுத்து அவர் ஹோமா நிலைக்குச் சென்றார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்தார் என வைத்திசாலைத் தரப்பு தெரிவித்தது.
மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர் கடந்த வருடம் (2018) செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love