அதிகளவு இனிப்பு, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்பட்டு உலகளாவிய ரீதியில் 2017ஆம் ஆண்டில் 11 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. லன்செட் என்னும் மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு நடாத்தப்பட்ட 195 நாடுகளில், மோசமான உணவுக் கட்டுப்பாட்டால் அதிகளவு உயிhழப்புகள் ஏற்படும் நாடாக உஸ்பெக்கிஸ்தான் உள்ளதுடன், குறைவான இறப்புகள் ஏற்படும் நாடாக இஸ்ரேல் காணப்படுகின்றது.
பிரித்தானியா 23ஆவது இடத்திலும், ஐக்கிய அமெரிக்கா 43ஆவது இடத்திலும், இந்தியா 118ஆவது இடத்திலும், சீனா 140ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.
அந்தவகையில், ஆரோக்கியமான உணவுகளான கடலைகள், விதைகள், பால், முழுத் தானியங்களை உள்ளெடுத்தலின் சராசரி மிகக் குறைவாக உள்ளதுடன், பல இனிப்புப் பானங்களையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும், உப்பையும் அதிகளவில் உள்ளெடுக்கின்றனர் எனவும் இதன் காரணமாக 2017ஆம் ஆண்டில் ஐந்திலொரு இறப்புகள், மோசமான உணவுக் பழக்கவழக்கங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதேவேளை, பரிந்துரைக்கப்படும் கடலைகள், விதைகளில் 12 சதவீதமானவற்றையே மக்கள் உள்ளெடுப்பதாக அதாவது, பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமுக்குப் பதிலாக சராசரியாக மூன்று கிராம் அளவினையே மக்கள் எடுத்துக் கொள்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரிந்துரைக்கப்பட்டதை விட 10 மடங்கு இனிப்பான பானங்களை உள்ளெடுப்பதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, நாளொன்றுக்கு உள்ளெடுக்கப்பட வேண்டிய 125 கிராம் முழுத் தானியங்களுக்குப் பதிலாக சராசரியாக 29 கிராம் முழுத் தானியங்களையே மக்கள் உள்ளெடுப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது