ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந்திய தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியானாவை சேர்ந்த இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான 29 வயதான மன்பிரீத் கவுர் என்பவருக்கே இவ்வாறு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து நிறுவனம் நேற்றையதினம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மன்பிரீத் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் 18.86 மீற்றர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றிருந்தார்.
எனினும் இந்த போட்டியில் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை காலம் 2017-ம் ஆண்டு ஜூலை 20-ந் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளதனால் அந்த காலகட்டத்தில் மன்பிரீத் கவுர் வென்ற பதக்கம் மற்றும் சாதனைகளை இழக்க வேண்டியது வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது