ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சிரேஸ்ட சட்டத்தரணி பிரசாந்த் பூஷன் ஆகியோர் இந்த சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சீராய்வு மனுக்கள் மீதான வாதங்கள் முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ம் திகதி தீர்ப்பை ஒத்திவைத்த, நிலையில் இன்று தீர்ப்பு வழங்க்கப்படவுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் என்ற நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 58 ஆயிரம் கோடி ரூபா அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான 30,000 கோடி ரூபா மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கின் விசாரணை முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அதனால் ஆதலால், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
இந்தநிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டநிலையில் இந்த சீராய்வு வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது