169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறையினர் கூறினர்.
யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியில் உள்ள சட்டத்தரணி பி.மோகனதாஸ் என்பவரின் வீட்டில் கடந்த முதலாம் திகதி இரவு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. “சட்டத்தரணியின் குடும்பம் உறக்கத்திலிருந்த வேளை வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுத் தப்பித்தது.
சம்பவம் தொடர்பில் சட்டத்தரணியால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகளை யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் தினேஸ் கருணாரத்னவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்பினர் முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேகநபர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தேடப்படுகின்றனர்” என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Spread the love