ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் நினைவிடம் பராமரிப்பின்றிச் சிதைந்து காணப்படுவதாக தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
முதலாம் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்திருந்தமைக்கான சான்றாக தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில் உள்ள போதும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ள ஜராஜசோழன் நினைவிடம் பராமரிப்பின்றிச் சிதைந்து காணப்படுகின்றது.
இங்கு முறையாகத் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் சோழர்களின் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை, நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக அரசின் தொல்லியல் குழுவானது நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.