கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழகத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகின்றது
கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும்.
கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீன்பிடி தடைகாலம் என்பது 45 நாட்களுக்கு இருந்த நிலையில் தற்போது சில ஆண்டுகளாக அதை 60 நாட்களாக உயர்த்தி மத்திய-மாநில அரசுகள் நிர்ணயித்திருந்தது.
மீன்பிடி தடைகாலம் நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள் என்பதுடன் 20 குதிரை திறனுக்கும் குறைவான கண்ணாடி இழை படகுகளின் மூலம் குறைந்த தூரத்துக்கு சென்று சிறிய அளவிலான மீன்பிடியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது