நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 100 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதனை தணிக்கும் விதமாக, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 360 பேரை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்த நிலையில் கடந்த 7-ம் திகதி அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், தங்கள் நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மேலும் 100 மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. இவர்கள், வாஹா எல்லையில் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள மீனவர்களும் எதிர்வரும் 22 மற்றும் 29ம் திகதிகளில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.