191
வடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை பாரிய அளவில் மிதமிஞ்சியதாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்இ யதார்த்த ரீதியாக அது குறைக்கப்படவேண்டும் என்று கடந்த பத்து (10) வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையைப் புறந்தள்ளிஇ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன கருத்து வெளியிட்டுள்ள கருத்திற்கு ரெலோ தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
ரெலோவின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந. சிறிகாந்தா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த முழு விபரமும் பின்வருமாறு
இராணுவத்தின் பிரசன்னத்தால் அச்சத்திற்கு ஆளாகும் நபர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதே சாத்தியமான தீர்வாக அமைய முடியும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
இது அவரின் கருத்து என்பதை விட பிரதமர் றணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் நிலைப்பாடு என்று கொள்ளப்படுவதே பொருத்தமானது.
நாட்டின் பாதுகாப்பிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தின் உயர் மட்ட தலைமை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தெரிவித்துள்ள நிலையிலும் இப் பிரதேசத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருக்கின்றார்கள் என்பதும்இ கொழும்புக்கு வெளியே அமைந்திருக்கும் இராணுவ கள தலைமையகங்களில் 7 இல், வடக்கில் நான்கும்; கிழக்கில் ஒன்றுமாக மொத்தம் 5 தலைமையகங்கள் வட கிழக்குப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.
இதற்கான ஒரேயொரு காரணம் எதுவெனில், வடகிழக்கு மாகாணங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால்இ கட்டாயமாக இத்தகைய இராணுவப்பிடிக்குள் இப் பிராந்தியம் இருந்தே ஆக வேண்டும் என அது நம்புவதே ஆகும் என்று திட்ட வட்டமாக அடித்துக் கூற முடியும்.
வேறு விதமாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படாத வரையில் தமிழர் தரப்பில் இருந்து ஆயுதப்போராட்டம் ஒன்று மீண்டும் வெடிக்கக் கூடும் என சிங்களப் பேரினவாதிகளின் தரப்பில் நிலவிக்கொண்டிருக்கும் ஏகமனதான கருத்தொற்றுமையின் பிரதிபலிப்பே அது என்று கூறித்தான் ஆகவேண்டும்.
இதில் ஆச்சரியத்திற்கு எதுவும் இல்லை. யுத்தம் முடிவடைத்து 10 வருடங்கள் முடிவடையும் நிலையிலும் கூடஇ தமது நீண்ட கால அரசியல் அபிலாசைகளை துணிச்சலோடு இறுகப் பற்றி நிற்கும் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை, கடந்த கால அரசாங்கங்களைப் போலவேஇ ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் அச்சம் கலந்த எச்சரிக்கை உணர்வோடு கையாண்டு கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.
இத்தனைக்கும் இந்த அரசாங்கம் வீழ்ந்து விடாமல் வட கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் எம்.பிக்களில் இரண்டெருவரைத் தவிர மிகுதி அனைவரையும் தனது அணியில் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவுடன் கூடிய ஆதரவு தான்இ அதனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பது அதை விட, மிகக் கசப்பான உண்மையாகும்.
பிரதமர் றணில் விக்கிரமசிங்க சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப் பட்ட விடயங்கள் தொடர்பில் தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தனது மைத்துனரான பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன ஊடாக நாசுக்காகத் தெரிவிக்கும் யுக்தியைக் கைக்கொள்பவர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். முன்பு “படைத்தளங்களை வானத்தில் அமைக்க முடியாதுஇ நிலத்தில் தான் அவற்றை நிறுவ முடியும்” என்ற ஓர் அற்புதமான கருத்தை இதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன வெளியிட்டதை மறந்து விடுவதற்கில்லை.
பிரதமர் றணிலைப் போலவே இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தனவும் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மருமகன் எண்பதையும் இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அந்த அதி உத்தமரின் வழியில் அரசியலுக்கு வந்தவர்கள் அவரின் பாணியில் பேச முயற்சிப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல.
ஆனால்இ இதிலுள்ள புதுமை யாதெனில், போரில் புலிகள் இயக்கத்தினைத் தோற்கடித்ததாக இப்போதும் மார்தட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்பக்சவும் அவருடைய கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர்களும் கூட பேசத் துணியாத அப்பட்டமான பேரினவாதக் கருத்துக்களை றுவன் விஜயவர்த்தன போன்ற இளைய அரசியல்வாதிகள் தயக்கம் இன்றிக் கக்குகின்றார்கள் என்பது தான்!
இந்தச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் இராணுவத்தின் பிரசன்னத்தை சமநிலைப்படுத்திஇ அதன் ஊடாக வட கிழக்கில் நிலவிக்கொண்டிருக்கும் இராணுவமயச் சூழ்நிலையின் இறுக்கத்தையும் நெருக்குதலையும் தளர்த்துவதற்குக் கூட இந்த அரசாங்கம் தயாரில்லை என்றால் அதைச் சாதிப்பதற்கு என்ன வழி என்பதை கட்டாயமாக தமிழ் மக்கள் சிந்தித்தே தீரவேண்டும்.
திறப்பை எங்கள் கைகளில் வைத்துக்கொண்டு பூட்டப்பட்டிருக்கும் கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பூட்டைப்பார்த்து ஏங்குவதில் அர்த்தமில்லை. எம் இனத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் கூட இது பொருத்தமானதாகும். மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love