குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் கடல்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள அதே நேரத்தில் இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு தேவையான மீன் மற்றும் கடல் உணவு பொருட்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மன்னார் தீவு பகுதியானது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு காணப்படுவதனால் பெரும்பாலன மக்கள் மீன்பிடி தொழிலையே செய்துவருகின்றனர்
அதே போன்று தீவகத்திற்கு அப்பால் உள்ள வங்காலை தொடக்கம் சிலவத்துறை முள்ளிகுளம் வரையிலும் விடத்தல் தீவு தேவன்பிட்டி வெள்ளாங்குளம் பகுதி வரையிலும் உள்ள கரையோரப்பகுதிகளிலும் பெரும்பாலும் மக்கள் மீன்பிடியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கடல் வளங்களை பாதிக்கின்றவகையிலும் மீன்வளங்களை குறைக்கின்றவகையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட முறைகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
குறிப்பாக சுருக்குவளை, டைனமோட், தங்கூசிவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக சங்கு அகழ்வுகளில் ஈடுபடல், கட்டுவலை நிபந்தனைகளை மீறி மீன் பிடித்தல், டோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மன்னார் கடல் பகுதிகளில் இடம் பெற்று வருகின்றது
அந்த வகையில் கடந்த 2015 மற்றும் 2016 , 2017 ஆண்டுகளில் மன்னார் கடல் எல்லை பகுதிக்குள் சட்ட விரோதமாக டைனமோட் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் சௌத்பார் மற்றும் பள்ளிமுனை பகுதிகளை சேர்ந்த சுமார் 65 மீனவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்
அதே நேரத்தில் தங்கூசிவலை மற்றும் சுருக்குவலைகளை ஏனைய தடை செய்யப்பட்டவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் பேசாலை தாழ்வுபாடு தலைமன்னார் விடத்தல்தீவு வங்காலையை சேர்ந்த 115 மீனவர்கள் கடந்த 2015-2017 ஆண்டு காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்
அது மாத்திரம் இன்றி சட்டவிரோதமாக ரோலர் படகின் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டதாக தலைமன்னார் எருக்கலம் பிட்டி கடல் பகுதிகளில் 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் ஒரு சிலரே ஆனாலும் தொடர்சியாக இரவு நேரங்களிலும் அதே நேரத்தில் அதிகாரிகளிடம் பிடிபடாமலும் இவ் தடைசெய்யப்பட்ட தொழிகளில் ஈடுபடுபவர்கள் ஏராளம்
இவ்வாறான தொழில்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெருமளவிலான வருமானத்தை கொடுத்தாலும் எமது எதிர்கால சந்ததிகளுக்கு தேவையான ஒட்டு மொத்த மீன்வளங்களையும் அழித்து விடக்கூடிய மிகப்பாதகமான செயல் என சமூக ஆர்வளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
அதே நேரத்தில் இந்திய மீனவர்களின் வருகையை எவ்வாறு எதிர்கின்றோமோ என்ன காரணத்திற்காக எதிர்கின்றோமோ அதே காரணங்களுக்காக இவ்வாறான சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டும் எனவும் மன்னார் மாவட்டம் மாத்திரம் இன்றி வடமாகாணம் முழுவது இவ்வாறான சட்ட விரோதமான மீன்பிடிமுறைகள் நடைமுறையில் உள்ளது இவ்வாறான விடயங்களை கடல் தொழில் வள தினைக்களத்தினால் முற்று முழுதாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்ற போதும் பாரிய போராட்டங்களின் பின்னர் ஓரளவுதான் கட்டுப்படுத்தியுள்ளனர் .
அரசங்கமும் சில விடயங்களில் அதிக அக்கறை செலுத்துவதில்லை சில அரசியல் வாதிகள் மக்களின் வாக்குகளுக்காக இவ்வாறான சட்ட விரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவு வழங்குவதுடன் சில தொழில்களுக்கு அனுமதியும் பெற்றுக்கொடுக்கின்றனர் எனவும் தடை செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள எல்லா தொழில் முறைகளும் இங்கே வட பகுதியில் நிறுத்தப்பட்டாலே தவிர இங்குள்ள வளங்கள் நாசமாக்கப்படுவதும் சூறையாடப்படுவதையும் கடவுளாலும் தடுக்க முடியாது என வடமாகாண மீன்பிடி இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவிக்கிறார்.
இவ்வாறான தொழில்களில் ஈடுபடுபவர்கள் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு சூழலுக்கும் வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று வழி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கோரிக்கையும் விடுக்கின்றனர்