பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பினை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (17.04.19) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளமையும், ஒருகுடும்பத்தில் அனைவரும் உயிரிழந்துள்ளமையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் மட்டக்களப்பு, கல்லடி புதிய டச்பார் இன்னாசியார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள 48 வயதுடைய ஜுட் ஹென்றிக், 42 வயதுடைய அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி அவர்களது மகன் 19 வயதுடைய ஜு.ஹெய்ட், 12 வயதுடைய மகள் ஷெரேபி ஆகியோரும் கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியை சேர்ந்த 34 வயதுடைய லிஸ்டர், அவரது மனைவி 27 வயதுடைய நிசாலி அவர்களது இரட்டைக் குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான 56வயதுடைய ரெலிங்டன் ஸொப்ஸ், 53வயதுடைய சில்பியா ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் நிசாலியின் குடும்பத்தினை சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வேனில் 12 பேர் சென்றுள்ளதாகவும் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டு பாதையில் பிழையான பக்கத்தால் பயணித்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மஹியங்கனை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகியங்கனையில் விபத்து – 3 குழந்தைகள் – 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி
Apr 17, 2019 @ 03:48
இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 குழந்தைகள் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகியங்கனை – பதுளை பிரதான வீதியின் மகியங்கனை தேசிய பாடசாலையின் முன்னால் இன்று (17.04.2019 )அதிகாலை 1.35 அளவில் தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்குநேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டள்ளது . மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே, விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் பேருந்து வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.