யாழ்.கைதடி கோப்பாய் பாலத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒட்டுசுட்டானை சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60), அவரது மனைவி பா.மேரி கில்டா (வயது 53) கைதடி மேற்கை சேர்ந்த கி.ரொலிஸ்ரா (வயது 32), மற்றும் ஜெ. ரொமினா ஆகிய நால்வரே காயமடைந்தனர்.
ஒட்டுசுட்டானை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தம்பதிகள் நீர்வேலியில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு , தமது வீடு நோக்கி செல்லும் போது கோப்பாய் பாலத்தில் அவர்களின் மோட்டார் சைக்கிள் சறுக்கி சென்று முன்னால் பயணித்துக்கொண்டு இருந்த பெண்களின் மோட்டார் சைக்கிளின் மோதி விபத்துக்கு உள்ளாகியது.
அதில் பாலசுப்பிரமணியம் தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனைய இரு பெண்களும் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
யாழில். பிரதான வீதிகளில் உள்ள கைதடி பாலம் , நாவற்குழி பாலம் , கோப்பாய் பாலம் , வண்ணாத்திப்பாலம் , வல்லை பாலம் ஆகிய இரும்பு பாலங்களாக அமைக்கப்பட்டு இருந்தன.
மழை காலத்தில் பாலங்கள் சறுக்கும் தன்மையுடையதாக காணப்படும்.அதனால் இந்த பாலங்களில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வந்தன. அந்நிலையில் கைதடி , நாவற்குழி பாலங்கள் தற்போது சிமெந்து பாலங்களாக அமைக்கப்பட்டு , தார் கலவை போடப்பட்டு உள்ளன.
ஏனைய பாலங்கள் இரும்பு பாலங்களாக காணப்படுவதனால் மழை நேரங்களில் விபத்துக்கள் இடம்பெறுகின்றன. நேற்றைய தினமும் மழை காரணமாக பாலம் சறுக்கும் தன்மையுடன் காணப்பட்டமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.