சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் காவற்துறையினரிடம் முறையிட்டு விட்டு திரும்பியவர்கள் மீது இனம் தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியதில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாவகச்சேரி பாலாவி பகுதியில் நேற்றைய தினம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த தாக்குதலில் ஒருவர் வாள் வெட்டு காயங்களுக்கும் ஏனைய நால்வரும் அடிகாயங்களுக்கும் இலக்காகி உள்ளதாக சாவகச்சேரி வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலாவி தெற்கை சேர்ந்த மார்கண்டு மகேஸ்வரன் (வயது 45) என்பவரே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். அதே இடத்தை சேர்ந்த மாணிக்கராசா குமார் ((வயது 19)), கெற்பேலி மேற்கை சேர்ந்த மனோகரன் நவீனன் ((வயது 32)), கச்சை தெற்கை சேர்ந்த மகேஸ்வரன் சாயினன் (வயது 21), சாவகச்சேரியை சேர்ந்த சிவபாலன் தீசன் (வயது 17) ஆகிய நால்வரும் அடி காயங்களுக்கு இலக்காகி உள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கொடிகாமம் காவற்துறையினரிடம் முறையிட்டு விட்டு திரும்வும் வழியில் வாகனங்களில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் தம்மை தாக்கினார்கள் என தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாம காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.