அழகியற் கலைப் பட்டதாரிகள் என்பவர்கள் கலை ஆளுமைகளாக முளைகொள்ள வேண்டியவர்கள். அதற்கான பதியம் செய்யும் களங்களாக உயர் அழகியல் கற்கைகள் நிறுவகங்கள் அமைய வேண்டும். அதற்குப் பல்வேறு தரப்பட்டதும், பல்வேறு தலைமுறையினதுமான ஆற்றுப்படுத்தும் கலை ஆளுமைகள் உலவும், உரையாடும், அரங்கேறும், ஆற்றுகைகள் செய்யும், புதிது புனையும் சூழல் திகழ வேண்டும்.
அப்போது குகதாசன் கிரிதரன் போன்ற இளம் கலை ஆளுமைகள் உரிய திசைமுகம் கொள்ளும் சூழல் வலிமைபெறும். இசைக்கலை, புகைப்படக்கலை, தலைமைத்துவப் பண்புகள் கொண்ட குகதாசன் கிரிதரனின் புகைப்படங்களும் இசையும்; இணைந்த காட்சிப்படுத்தல் வித்தியாசமான அனுபவத்தைத் தரவல்லது.
பறவைகள் புகைப்படக்கலை வல்ல இளம் ஆளுமையான குகதாசன் கிரிதரன் தனது இசைத்துறைப் பின்னணியையும் இணைத்து பறவைகள் மற்றும் பறவைகள் போடும் பல்வகை இசை ததும்பும் சத்தங்கள் இணைந்ததாக இக்காட்சிப்படுத்தலை ஒழுங்குபடுத்தியுள்ளார்.
இயல்பாகவே தனது ஆற்றலைத் தானாகவே அடையாளம் கண்டு தன்னை நிலைநிறுத்தி வரும் இளம் ஆளுமையான குகதாசன் கிரிதரனின் இக்காட்சிப்படுத்தல் பெருமைக்குரியது. அதேவேளை அடையாளம் காணாத ஆற்றல்களை அடையாளம் காண வைத்து ஆளுமைகளாக உருவாக்கும் பணியினை முன்னெடுத்து முக்கியத்துவம் பெறுவது பெருமிதத்துக்குரியது.
குகதாசன் கிரிதரனின் இக்காட்சிப்படுத்தல் இயற்கை மீதான குறிப்பாக பறவைகள் மீதான நாட்டத்தை அதிகரிக்கவல்லது. அதேவேளை இளம் கலை ஆளுமையாக பரிணமிக்கும் செய்தியினைக் குகதாசன் கிரிதரன் வெளிப்படுத்தியிருக்கின்றார். இது சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பண்பாடாகப் பரவிப் பெருகும் வகை செய்தல் எமது பணியாகும்.
கலாநிதி. சி. ஜெயசங்கர்
பதில் பணிப்பாளர்
சு.வி.அ.க. நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழம், இலங்கை.