யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் காவற்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் – அராலி வீதிக்கும், நாவந்துறை வீதிக்கும் இடையே காவற்துறை தடை போடப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினரும் காவற்துறையினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார். தான் மின்குமிழ் விற்பனை முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
எனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்கள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. அதனால் வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவரிடம் பல கார்களிலும் வாகனங்களிலும் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும் அயலவர்களும் கண்டுள்ளனர்.
இதனால் நாட்டில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அந்த இளைஞன் மீது சந்தேகம் கொண்டவர்கள் காவற்துறையினரருக்குத் தகவல் வழங்கினர். அதனடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப் படையினரும் காவற்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வீடு சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.