இலங்கையில் ஈஸ்டர் விடுமுறையை கழிக்கலாம் என தன் குழந்தைகளுடன் கொழும்பு சென்ற டென்மார்க் பணக்கார தம்பதியினர், குண்டுவெடிப்பில் தமது 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
டென்மார்க்கின், 46 வயதுடைய தொழிலதிபர் அன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சனுக்கு (Anders Holch Povlsen) நான்கு குழந்தைகள். போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர். உலக அளவில் 252 ஆவது பணக்காரர். ஊடக நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில் நிறுவ னங்கள் உள்ளன. இவரின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் கோடி.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நிலையில், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் அன்ட்ரசனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
இந்த தகவலை அண்ட்ரசனுக்கு சொந்தமான பாவன்சன்ஸ் பேஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை.
குண்டு வெடிப்புக்கு 3 குழந்தைகளை பறி கொடுத்த ஆன்ட்ரசனுக்கு ஸ்காட்லாந்தில் நாட்டில் 2 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1 சதவிகிதம் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது.
பிரித்தானியாவில் அதிக அளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். இது தவிர 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன. பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜான்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்சனுக்குச் சொந்தமான ‘பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.