இப்பெல்லாம் சொர்ணலதா பாட்டுகளை முழுசா கேட்கவே முடியறதில்ல. பாதி கேட்கும்போதே மனசு கணத்துப் போயிடும். உடனே பாட்டை நிறுத்திடுவேன். அவங்க பாடினதுல எனக்குப் பிடிச்ச பாட்டுன்னா, `போவோமா ஊர்கோலம்…!'”
“மாலையில் யாரோ மனதோடு பேச…. ”
என்று தொடங்கும் `சத்ரியன்’ பாடலை விரும்பிக் கேட்கும் எவர் ஒருவருக்கும் சட்டென்று கண்முன் வந்துநிற்பது சொர்ணலதாவின் முகமாகவே இருக்கும். அந்தப் பாடலின் சூழல், மனநிலையைக் கேட்பவருக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் பரிமாறும் வித்தையைக் கொண்டிருந்தது அவரின் குரல். அந்தக் குரலைப் பின்பற்றியே மாலைப் பொழுதையும் நீலக் கடலையும் அடைந்துவிட முடியும். அதேபோல, `வள்ளி’ திரைப்படத்தில் இடம்பெறும் `என்னுள்ளே.. என்னுள்ளே…’ பாடலும் சொர்ணலதா ரசிகர்களுக்கு மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. `அலைபாயுதே’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற `எவனோ ஒருவன் வாசிக்கிறான்..’ பாடலுக்கு உயிரோட்டம் தந்தது சொர்ணலதாவின் குரல் என்றால் மிகையில்லை. மெலடிப் பாடல்கள் மட்டுமன்றி, துள்ளலிசை பாடல்களைப் பாடும் திறமையைப் பெற்றவர். அவர் குரலில் வழியும் குழந்தைமை மற்றவர்களிடையே தனித்துக் காட்டியது. அதுதான் மெலடி, துள்ளல், சோகம் என எந்த வகைப் பாடல்களாக இருந்தாலும் சொர்ணலதாவின் பாடலாக நாம் அடையாளம் இட்டுக்கொள்ள வைக்கிறது. இன்று அவரின் பிறந்த நாள்.
பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்யும் தீவிரமான சமூகப் பிரச்னையைப் பேசிய படமான கருத்தம்மாவில், `போறாளே பொன்னுத்தாயி…’ என, உருக்கமான பாடலைப் பாடியிருந்தார் சொர்ணலதா. அந்தப் பாடலுக்காக, 1994-ம் ஆண்டுக்கான சிறந்த பாடகி எனும் தேசிய விருதைப் பெற்றார். 1987-ம் ஆண்டு, பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸூடன். ‘சின்னஞ்சிறு கிளியே’ எனும் பாடலை `நீதிக்குத் தண்டனை’ எனும் படத்திற்காக, சொர்ணலதா பாடியபோது அவருக்கு வயது 14. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ஆரம்பித்த, அவரின் பாடல் பயணம், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனப் பலரின் இசைக்கோவைகளில் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் பாடியுள்ளார்.
மாநில, தேசிய விருதுகளைக் கடந்தும் ரசிகர்களின் பெரும் அன்போடு தொடர்ந்த சொர்ணலதாவின் இசைப்பயணம், அவரின் 37-வது வயதோடு முடிவுக்கு வந்தது. சுவாசப் பிரச்னை தொடர்பான உடல்நலக் குறைவால், 2010 செப்டம்பரில் மரணமடைந்தார். அவரின் மறைவை எண்ணி, புகழ்பெற்ற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, இரங்கல் பாடலை எழுதிப் பாடியிருந்தார். அதில்,
“மண் உலகில் பாடிய பெண் குயிலே
விண் உலகில் பாடிட விரைந்தாயோ!… என்று தொடங்கும் பாடலில்,
பண்பாடும் குரல் எவன்
கண்பட்டு கரைந்ததோ
புண்பட்டதோ சொல் சொர்ணமே…
மறுபிறப்பிருந்தால் இந்த மண்ணில் வந்து
தமிழ் மகளாய் பிறந்திடம்மா…”
என்று பாடியிருப்பார். அவரிடம் சொர்ணலதா பற்றி நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள அழைத்தோம்.
“சொர்ணலதாவுடன் மூன்று பாடல்கள்தான் சேர்ந்து பாடியிருக்கேன். ஒரு பாட்டைச் சீக்கிரமாகவே கற்றுக்கொண்டு பாடிவிடும் திறமை அவருக்கு உண்டு. இப்போ, அவரை நினைத்தால் பாடிய பாட்டுகளை விட, இவ்வளவு சீக்கிரமே இறந்துபோன வருத்தம்தான் அதிகம் ஞாபகத்துக்கு வரும். அவர் உயிரோடு இருக்கும்போது அந்தப் பாடல்களைக் கேட்பது வேறு, அவரின் இறப்புக்கு அப்புறம் கேட்பது வேறு. அவருக்குள்ள அப்படி சோகம் இருக்கு என்பது அவங்க குடும்பத்தினரைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. என்னோடு ரெக்கார்ட்டிங் வரும்போது, `நீங்க பாடின கிராமத்துப் பாட்டுகளைக் கேட்டேன் நல்லா இருந்துச்சு’னு பாட்டு சம்பந்தமாகத்தான் பேசுவாங்க. எல்லோரையும்போல சந்தோஷமாத்தான் இருக்காங்கனு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா, அப்படி ஒரு சோகத்தை வெச்சிக்கிட்டு எப்படித்தான் இவ்வளவு அருமையான பாட்டுகளைப் பாடினாங்களோ தெரியல. அது இன்னிக்கு வரைக்கும் ஆச்சர்யம்தான். வேப்பமரத்தில் எப்படி தேன் வடியும்!
சொர்ணலதா கடைசிக்காலத்தில் பாடிய, பாட்டுகள் எல்லாமே ரசிகர்களுக்காகத்தான். ஏன்னா, அவ்வளவு துன்பத்தை அனுபவிச்சிட்டு பாட வேண்டிய தேவையே இருக்காது இல்லையா? அது ஒருவகையில் தியாகம்தான். அவரோடு சோகத்தை யார்கிட்டேயும் சொன்னதே இல்ல. ஒருவேளை அதை மனசுக்குள்ளே அடக்கி, அடக்கி இன்னும் அதிமாயிருக்கும் போல. அதனாலதான், இப்பெல்லாம் சொர்ணலதா பாட்டுகளை முழுசா கேட்கவே முடியறதில்ல. பாதி கேட்கும்போதே மனசு கணத்துப் போயிடும். உடனே பாட்டை நிறுத்திடுவேன். அவங்க பாடினதுல எனக்குப் பிடிச்ச பாட்டுன்னா, `போவோமா ஊர்கோலம்….” ஆனா, அவங்க ஊர்வலத்தை மேல் நோக்கி விட்டுட்டாங்க. சொர்ணலதாவிடம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தமிழ் வார்த்தைகளைத் தெளிவாக, சரியாகப் பாடுவார்.
நல்ல பாடகி. இவ்வளவு சீக்கிரம் அவங்களுக்கு இறப்பு வந்திருக்க வேணாம்” என்று துயரத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
இலக்கியவாதிகளையும் சொர்ணலதாவின் பாடல்கள் வெகுவாக ஈர்த்திருக்கின்றன. சொர்ணலதாவின் பாடல்களைப் பற்றி நாடோடி இலக்கியன், `தனியொருத்தி’ எனும் நூல் எழுதியுள்ளார். கவிஞர் இசை எழுதியுள்ள ஒரு கவிதையின் தலைப்பே, `இந்த முறை சுவர்ணலதா சரியாகப் பாடவில்லை” என்பதுதான்.
ஆகச் சிறந்த பாடகி சொர்ணலதாவின் பிறந்த நாளில் அவரின் மரணத்தைப் பற்றியே அதிகம் பேசினாலும். அவரின் அடையாளம் பாடல்கள்தான். அவரின் ரசிகர்களின் மனத்தில் எந்நாளும் அந்தக் குரலுக்கு இறப்பில்லை. மகிழ்வையும் ஆறுதலையும் பரிமாறும் சொர்ணலதாவின் குரலில் இன்றைய நாள் நனையட்டும்.