இந்தோனீசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோ முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ராஜ்ஜநெகோரோ தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகில் அதிவேகமாக கடலில் மூழ்கிவரும் நகரங்களில் ஒன்று என்பதுடன் இந்த நகரம் கடும் போக்குவரத்து நெரிசலையும் எதிர்கொண்டுள்ளது.
அத்துடன் இந்த நாடு டச்சு காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற 1945 முதலே தலைநகரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில் தற்போது வேறு இடத்துக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் மக்கள் வசிக்கும் ஜகார்த்தாவில் இருந்து தலைநகர் மாற்றப்படும் என அமைச்சர் அறிவித்த போதிலும் புதிய தலைநகரம் எங்கே அமையும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.
எனினும் புதிய தலைநகரம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்படும் இடங்களின் பட்டியலில் போர்னியோ தீவில் உள்ள காளிமாண்டன் மாகாணத் தலைநகரான பலங்க்கராயா முதலிடத்தில் இருப்பதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் கடல் மட்டத்துக்கு கீழே உள்ளன. நிலத்தடி நீரை மிதமிஞ்சி உறிஞ்சி குடிநீராகவும், குளிப்பதற்கான நீராகவும் பயன்படுத்துவதே இதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது #indonesia #capital