குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறையில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பதுடன், விசாரணைக்காக வீடுகளுக்குச் சென்றால் கதவடைப்புச் செய்கின்றனர் என கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக முறுகல் நிலை தொடர்கிறது. இடையிடையே கைகலப்பு – வாள்வெட்டு வன்முறையும் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வன்முறை உக்கிரமடைந்து வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றது. கெற்பலியைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலாவியை சேர்ந்தவர்கள் மீது வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தியது.
சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் வன்முறைக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்களில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கடந்த திங்கட்கிழமை உழவு இயந்திரத்தில் தமது முகங்களை துணிகளால் மறைத்து கட்டியவாறு வந்த 15க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் ஒன்று கெற்போலி மேற்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்த உடமைகளை அடித்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளது.
அந்த சத்தம் கேட்டு அயலவரான க. கனகலிங்கம் (வயது 31) அவ்வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த நபர்கள் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்தினர்.
குறித்த சம்பவங்களை அடுத்து ஊரவர்கள் திரண்டதும் தாக்குதல் கும்பல் தமது உழவு இயந்திரத்தையும் கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அதனை அடுத்து படுகாயமடைந்த நபரை ஊரவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
கெற்போலி மேற்கில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பழி தீர்க்கும் முகமாகவே பாலாவி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பில் கொடிகாம காவல்துறையினரிடம் கேட்ட போது ,
‘இரண்டு கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதகாலமாக முறுகல் நிலை தொடர்கிறது. சில வன்முறைகளும் அங்கு இடம்பெற்றன. எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் ஐவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் விசாரணைக்காக கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்றால் மக்கள் வீட்டுக்கதவை அடைத்துவிட்டு ஒத்துழைப்புத் தர மறுக்கின்றனர். வன்முறைகள் தொடர்பில் சாட்சியம் வழங்க எவரும் முன்வருகிறார்கள் இல்லை.
சாட்சியம் வழங்கினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அந்த ஊர்களின் மக்கள் அச்சமடைகின்றனர். அதனால் வன்முறைகளுடன் தொடர்புடைய 20 பேர் அடையாளம் காணப்பட்ட போதும் கைது செய்ய முடியவில்லை.
இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகியுள்ளனர். அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’ என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
#kodikamam #investigation #deny #police