குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பிருக்கிறது. அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்காகவே புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதி கொலைகளைச் செய்வதற்கும் துணிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நண்பகல் சுமந்திரன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
அதன்போது ஊடகவியலாளர் ஒருவர், அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் வவுனதீவுச் சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் வேறு நபர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. உங்கள் மீதான அச்சுறுத்தல் குற்றச்சாட்டிலும் முன்னாள் போராளிகளே கைது செய்யப்பட்டார்கள் இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட சுமந்திரன்,
இராணுவ புலனாய்வுப் பிரிவில் ஒரு பிரிவு மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை வெறும் வதந்தியாக மட்டும் அவர்கள் பரப்பவில்லை. அந்த வதந்தியை மக்கள் நம்பப் பண்ணுவதற்காக கொலைகளைக் கூட செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வவுனதீவு சம்பவம் எங்களுக்கு உறுதியாக்க காண்பிக்கின்றது.
அது ஒரு சம்பவம். அதனைப் போலத்தான் என்னைக் கொல்வதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டமும் அப்படியானதாக இருந்திருக்கலாம். ஏனெனில் உயிர் அவர்களுக்கு முக்கியமல்ல. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் நம்பவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
அதனால் அதற்கு அவர்கள் பலரை உபயோகிக்கிறார்கள். முன்னாள் போராளிகளாக இருந்தாலும் கூட எங்கள் எல்லாருக்கும் தெரிந்தவகையிலே அவர்களில் சிலர் புலனாய்வோடு வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரிந்த ஒரு இரகசியம். அது போலத்தான் இந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும். அவர்களும் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள்.
யார் இந்த தரப்புக்களோடு சேர்ந்து வேலை செய்தார்கள் என்பது இன்னமும் எங்களுக்குத் தெரியாது. இப்படியான தாக்குதல்கள் தயார் செய்யப்பட்டு. நடத்தப்பட்டு சில கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. துரதிஸ்டவசமாக இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் – என்றார்.
#ltte #police #masumanthiran #army