166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இடம் பெற்ற சம்பவங்களின் போது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் உயர் மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (2) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
அதி உயர் பாதுகாப்புகளுக்கு மத்தியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் சர்வ மத தலைவர்கள், தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனவிரத்ன, மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சியந்த பீரிஸ் , கடற்படை அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள், வலையக்கல்வி பணிப்பாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள் உற்பட திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக்கண்டு தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ,மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கைதுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல்,மாவட்டத்தில் உள்ள சுகாதாரம் மருத்துவ வசதிகள் உற்பட அவசிய தேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக நட்டில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக அரச திணைக்களங்கள்,வைத்தியசாலைகள் உற்பட மாவட்டத்தில் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மக்களின் பூரன ஒத்துழைப்புடன் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனவிரத்ன இதன் போது தெரிவித்தார்.
#mannar #meeting #security
Spread the love