குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
சாவகச்சேரி காவல நிலையத்திற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி காவல நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.
அதன் போதே கிராம சேவையாளர்களிடம் காவல்துறையினர் குடும்ப விபரங்களை கோரினார்கள்.
காவல்நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர்கள் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாத குடும்பங்கள் இருப்பின் உடனடியாக அவர்களை இனம் கண்டு பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பங்களோ தனி நபர்களோ பதிவுகளை மேற்கொள்ளாது இருப்பின் அது தொடர்பில் எமக்கு அறிய தாருங்கள். அத்துடன் பதிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை எமக்கு கையளிக்க வேண்டும்.
அத்துடன் எதிர்வரும் 06ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் இடர் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
பாடசாலைகள் தொடர்பில் கிராம சேவையாளர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் தினமும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருப்பார். மேலதிக தேவை ஏற்படின் இராணுவத்தினரின் உதவியை நாடுவோம்.
அதேவேளை செயலிழந்துள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களை மீண்டும் கூட்டி , கிராமத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
#chavakacheri #police #rejister