வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை ஆரம்பித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு பேரவையும் , அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதனையடுத்து கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்ததனையடுத்து இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்தியிருந்தநிலையில் கடந்த பெப்ரவரி மாதம் வியட்நாமில் இரு தலைவர்களும் சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை ஆரம்பித்துள்ளது
நேற்று காலை அங்குள்ள கிழக்கு கடலோர நகரமான வோன்சான் அருகே அமைந்துள்ள ஹோடோ தீபகற்ப பகுதியில் இருந்து குறைந்த இலக்கில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற பல ஏவுகணைகளை வடகொரியா சோதித்து பார்த்தது என தென்கொரியாவின் ராணுவ பணியாளர்களின் கூட்டுத்தலைமை தெரிவித்துள்ளது.
வட கொரியா ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் கிழக்கு கடலை நோக்கி 70 முதல் 200 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#NorthKorean #KimJongun #usa #un #nuclearweapon