திம்புள்ள பத்தனை கொவல்துறைப்பிரிவிற்குட்ட கொட்டகலை ஸ்ரீ பெரகும் சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோவிற்கு அதிகமான வெடி மருந்துகள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இப்பாடசாலையின் வளாகப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்டிருந்த போது அங்கு குப்பை கூழங்கள் நிறைந்துள்ள ஒரு பகுதியில் பேக் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் இந்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கல் உடைப்பதற்காக பாவிக்கப்படும் வெடி மருந்துகள் என பாதுகாப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று (06.05.2019 )ஆரம்பிக்கப்பட்டுள்ள போது குறித்த சிங்கள வித்தியாலயத்தின் வளாகப்பகுதிகள் அப்பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்களால் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குப்பை கூழத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை இருப்பதை கண்டு பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன்பொது ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்பு பிரிவினர் பொதியை மீட்டு பார்வையிட்ட போது அதில் கல் உடைக்க பயன்படுத்தும் வெடி மருந்துகளே இருப்பதாகவும், இப்பகுதியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எவரேனும் இதை தூக்கி எரிந்து விட்டு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினரும், இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்
(க.கிஷாந்தன்)
#shinhala #school #kottakala