இலங்கை பிரதான செய்திகள்

மாவையின் – சிவஞானத்தின் சட்ட அறிவில், முரளிக்கு சந்தேகம் – சட்ட அறிவு இருக்கு என்கிறார் சிவஞானம்…

சட்ட அறிவில் சந்தேகம்..
சுகாதார துறையில் உண்மையான அதிகாரப் பகிர்வுக்காக எந்த முயற்சியையும் இதுவரை செய்யாதவர்கள் சடுதியாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனம் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாக இருக்கிறது என்று தெரிவித்து இருப்பது சட்ட அறிவு தொடர்பாக பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. என சமுதாய வைத்திய நிபுணரான வைத்தியர் முரளி வள்ளிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
அண்மையில் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஆளுநரின் செயலாளரினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் (கீழ் இணைக்கப்பட்டுள்ளது) இந்த நியமனம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களான திரு மாவை சேனாதிராஜா மற்றும் திரு சி வி கே சிவஞானம் ஆகியோரினால் தெரிவிக்கப்பட்ட அபத்தமான கருத்துக்கள் இவர்களுடைய சட்ட அறிவு மற்றும் இவர்களால் நிர்ணயிக்கப்பட இருக்கும் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 
 
மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் அகில இலங்கை ரீதியில் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்த அகில இலங்கை ரீதியான நியமனங்களுக்குள் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனமும் அடங்கும். 1987 ம் ஆண்டு மாகாணங்களுக்கு அதிகார பகிர்வை வழங்கும் 13 ம் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்பட்ட போதிலும் இன்றுவரையும் 25 மாவட்டங்களுக்கும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனங்கள் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வழங்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரிய சட்ட திருத்தத்தை கடந்த 32 வருடங்களுக்குள் செய்திருக்க வேண்டும். அல்லது மாகாணசபை மூலமாக உச்ச நீதிமன்றத்தில் இந்த நியமனங்களை கேள்விக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். 
 
சுகாதார துறையில் உண்மையான அதிகாரப் பகிர்வுக்காக எந்த முயற்சியையும் இதுவரை செய்யாத திரு மாவை சேனாதிராஜா மற்றும் திரு சி வி கே சிவஞானம் சடுதியாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனம் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாக இருக்கிறது என்று தெரிவித்து இருப்பது இவர்களுடைய உண்மையான நோக்கம் மற்றும் , சட்ட அறிவு தொடர்பாக பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
 
 இந்த அபத்தமான கருத்துக்கள் தொடர்பாகவும் இவற்றை தெரிவித்து வருபவர்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களை சரியாக வழி நடத்துவார்களா என்ற சந்தேகமும் கவலையும் சிரேஷ்ட தமிழ் மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சட்ட அறிவு இருக்கு..

நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான சட்ட  அறிவு இருந்ததினாலேதான் மிக நீண்டகாலம் மாநகர ஆணையாளராகவும் முதலாவது வடக்கு மாகாண சபையின் எல்லாஅமர்வுகளையும் கொண்டு நடாத்தியுள்ளேன். என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனம் தொடர்பாக  வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் அவர்களுக்கு சட்ட அறிவு இருக்கா என தான் சந்தேகம் கொள்வதாக சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதற்கு பதிலளிக்கும் முகமாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு செய்தி குறிப்பை அனுப்பி வைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில் நியமனம் தொடர்பாக  சமூதாய மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்கள்  வெளியிட்ட  அறிக்கை தொடர்பான சில தெளிவு படுத்தல் அவசியம் என கருதப்படுகின்றது.

எம்மைப் பொறுத்தவரையில் எமது சட்டஅறிவு மற்றும் தமிழர்களின் எதிர்காலம் பற்றி கேள்வியெழுப்பியுள்ள போதும் அவர் ஒரு சமூதாய மருத்துவ நிபுணர் என்பதற்கும் அப்பால்அவர் ஒரு சமூக நலன் சார்ந்த சிந்தனையாளர் என்பதற்கு மேலான மதிப்பளிக்கின்றோம் என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான சட்ட  அறிவு இருந்ததினாலேதான் மிக நீண்டகாலம் மாநகர ஆணையாளராகவும் முதலாவது வடக்கு மாகாண சபையின் எல்லாஅமர்வுகளையும் கொண்டு நடாத்தியுள்ளேன்.

 இந்த நாட்டின் நியமன முறைமையில் நாடாளாவிய ரீதியான நியமனங்கள் யாவும் மத்திய அரசின் பொது சேவைகள் ஆணைக்குழுவின் அதிகார வரம்பிற்குள் இருப்பவை என்பதுஎமக்கு நன்றாக தெரியும்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியும் அவ்வாறானது என்பதும் எமக்கு தெரியும்.

இந்த அடிப்படையில்தான் சுகாதார அமைச்சருக்கு எம்மால் கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் அதிகார பகிர்வு கோட்பாட்டை இந்த நியமனம் மீறுகின்றது என்பதையும்ஏற்கனவே பலவீனமான மாகாண சபை அதிகாரத்தை இது மேலும் பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தோம்.

 எமது ஆட்சேபனை  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி சம்பந்தப்பட்டது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தும் முகமாகவே இந்த பதில் நியமனத்தை மீளாய்வு செய்து நிரந்தரநியமனம் ஒன்றை அது வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தியாகவும் இருக்கலாம் என்றும் அல்லது மாகாண ஆளணியில் உள்ள மருத்துவ சேவை அலுவலர் ஒருவரை பதில்கடமையாற்ற நியமிக்கும் படியே கோரியிருந்தோம்.

இந்த சட்ட நிலைப்படடை வலியுறுத்தியே ஆளுநரின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியதையும் வலியுறுத்திக் கூறவேண்டும். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியென்பது நியமனம் மத்திய அரசினது என்றாலும்  நிர்வாக ரீதியாக மாகாணசபையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.

மத்திய அரசாங்க ஆளணியை சேர்ந்த ஒருவர் தமது கடமைகளுக்கு மேலதிகமாக மாகாண ஆளணி பதவியொன்றில் பதில்கடமையாற்ற நியமிப்பது நிர்வாக முகாமைத்துவகோட்பாடுகளுக்கு முரணானது. அது இரட்டை கட்டிப்பாட்டுக்கும்,பொறுப்புக்கூறலுக்கும் வழிவகுத்து இரண்டையுமே பாதிப்படைய செய்யும்.

Any being which has two heads is a Monster என்ற முகாமைத்துவ வாக்கியம் இதற்கு பொருந்தும் இதற்கு  மேல்  அவரது  அரசியல்  சார்ந்த  விமர்சனங்களுக்கு   இந்த சந்தர்ப்பத்தில்  பதிலளிக்க விரும்பவில்லை. என குறிப்பிடப்பட்டு உள்ளது. #Jaffna #srilanka #Doubts

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap