குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தினை பூர்வீகமாக கொண்ட மக்கள் குடியேறுவதற்கு காணிகள் போதுமானதாக இல்லாத நிலையில், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வங்காலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ‘கலைஞர் குடியேற்றத்திட்டத்தினை’ இடம்மாற்ற கோரி நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார்.
குறித்த கடிதம் நேற்று திங்கட்கிழமை (13) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
நானாட்டான் பிரதேச சபையின் 13 ஆவது மாதாந்த சபைக் கூட்ட தீர்மானத்திற்கு அமைவாக குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு கிராம அலுவலகர் பிரிவுகளைக் கொண்ட குறித்த கிராமத்தில் 1800 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மக்கள் தொகையினைக்கொண்ட மிகப்பெரிய கிராமமாகும்.
இக்கிராமத்தில் மக்களின் குடியிருப்பிற்கான காணியின் அளவு மிகச் சொற்பமாகவே காணப்படுகின்றது. இக்கிராமத்தின் வடக்கு பகுதியில் பறவைகள் சரணாலயத்திற்கு என மிகப்பெரிய அளவிலான காணிகள் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்குப் பகுதியில் சிறுநாவற்குளம் பகுதியில் காணப்படும் காணியில் ‘கலைஞர் குடியேற்றத் திட்டத்திற்கென’ உள்வாங்கப்படவுள்ளதினால் அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வங்காலை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினர்களான ம.ஞானராஜ் சோசை மற்றும் ம.ஜெயனாந்தன் குரூஸ் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இக் குடியேற்றத் திட்டத்தினை மாற்றுவதற்கான தீர்மானம் நானாட்டான் பிரதேச சபையின் 13 ஆவது மாதாந்த சபைக்கூட்டத்தில் ஏகமனதான நிறை வேற்றப்பட்டுள்ளது.
எனவே வங்காலை கிராமத்தினை பூர்வீகமாக கொண்ட மக்கள் குடியேறுவதற்கு காணிகள் போதுமானதாக இல்லாத நிலையினை கருத்தில் கொண்டு எமது சபையின் கோரிக்கையினை சாதகமாக பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#கலைஞர் குடியேற்றத்திட்டம் #mannar #letter