Home இலங்கை 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்

by admin

முள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், தானும் அன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. எந்தவிதமான சுயஅரசியல் நோக்கங்களும் இன்றி இந்த நிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடுசெய்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அவர்களுக்கான நீதிக்காக குரல் கொடுப்பதற்குமாக முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஒன்று கூடுவதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். தமது உறவுகளை இழந்த மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர்விட்டு அழுது தீபம் ஏற்றி அஞ்சலி செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் இருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சர்வதேச சமூகத்தின் கவனம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்து திசை திரும்பியிருக்கின்ற நிலையிலும், அரசாங்கம் தற்போதைய சூழ்நிலைகளை எமக்கு எதிராகப் பல்வேறு வழிகளிலும் பயன்படுத்திவருகின்ற நிலையிலும், எமது உரிமைகள் தொடர்பிலும் எமக்கு கிடைக்கவேண்டிய நீதி தொடர்பிலும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டவேண்டிய அவசியம் இன்று எமக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுடன் தொடர்புபட்டது. நாடுகளுக்கு இடையில் அவ்வப்போது ஏற்படக்கூடிய போர்களும், சர்வதேச பயங்கரவாத சக்திகளினால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நாசகார செயற்பாடுகளும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான நீண்டகால நியாயமான போராட்டத்தையும் இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டத்தையும் பாதித்துவிடக்கூடாது.

இது சம்பந்தமாக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது. இலங்கையில் உள்ள எல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் சட்டம் சமனானது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களின் சுயநிர்ணய உரிமையினை நிலைநாட்டும் வகையிலும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சமஷ;டி கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதே இலங்கையில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் என்பதை ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஒன்பது மாகாணங்களுக்கும் நிரந்தர சுயாட்சி உரித்தை வழங்குவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் எந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களும் இணைந்து செயற்பட முன்வந்தால் அவ்வாறான இணைப்புக்குச் சட்டத்தில் இடமளிக்கப்படவேண்டும். வடகிழக்கு இணைப்பில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தனியலகொன்றை வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை. இவற்றை அரசாங்கமும் எதிர்க்கட்சியினரும் சர்வதேச சமூகமும் கவனத்திற்கு எடுக்கவேண்டும்.

ஆகவே இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வினை மிகவும் அமைதியான முறையிலும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று நாம் அஞ்சலி செலுத்தி நடத்துவது அவசியமாகியுள்ளது. அத்துடன் சர்வதேச சமூகத்துக்கு எமது செய்தியினைக் கூறுவதும் இந்தச் சமயத்தில் அவசியமாகியுள்ளது. எனவே தான் சர்வதேச சமூகத்தின் கடப்பாடு பற்றி இங்கு நாம் குறிப்பிட்டிருந்தோம்.

கடந்த காலங்களைப் போல மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரிமைகள் மற்றும் நீதி ஆகியவை தொடர்பில் தமது உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. அன்றைய தினம் நானும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றோம்.

#இனப்படுகொலை #நினைவுகூர  #முள்ளிவாய்க்காலில் #wickneswaran #mullivaikal

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More