திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் “அரசிமலை” பகுதியின் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி – பிரதமருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடமைப்பு அதிகார சபையினால் பெரும்பான்மையின மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் முயற்சிகள் அண்மையில் வெளிக் கொணரப்பட்டன. இந்த நிகழ்வுகள் அப் பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையிலேயே இந்த விடயம் குறித்து சம்பந்தன் கடிதம் ஒன்றினை ஜனாதிபதி – பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் பிரதிகளை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, நில அளவையாளர் நாயகம், தொல்பொருள் ஆணையாளர், நில அளவை அத்தியட்சகர், திருகோணமலை மாவட்டச் செயலாளர் அரசாங்க அதிபர், திருகோணமலை பிரதேச செயலகம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.#rsambandan #TNA #Arisimalai #Trinco