கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை கோரிய போதும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் கடந்த 12-03-2019 அன்று தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் மாவட்டத்தில் கடந்த 2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட அபிவிருத்திப் பணிகள் என்ன? அவற்றுக்கான கேள்விக் கோரல் எந்த பத்திரிகைகளில் எந்த திகதியில் கோரப்பட்டது? எத்தனை விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? என்பன கோரப்பட்டது.
ஆனால் இவற்றுக்கு உரிய காலத்தில் எந்த பதிலையும் வழங்காத மாவட்டச் செயலகம் கடந்த 09-05-2019 அன்று 2018 ஆண்டுக்குரியது எனக் கூறப்பட்டு எட்டு ஒப்பந்த பணிகளின் விபரங்களை மாத்திரம் வழங்கியிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மாவட்டத்தில் ஐந்து மில்லியன் தொகைக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் ஏராளம் உண்டு. அத்தோடு 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்குரிய தகவல்களை மாவட்டச் செயலகம் வழங்கவில்லை.
இதனை தவிர கடந்த 12-04-2019 மற்றும் மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்தில் எவ்வளவு நிதி காணப்படுகிறது? குறித்து நிதி எவ்வளவு காலமாக திரட்டப்படுகிறது? எவ்வாறு சேகரிக்கப்படுகிறது? இதுவரை என்னென்ன தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? போன்ற விபரங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் அவற்றுக்கும் இச் செய்தி எழுதப்படும் வரை எந்த பதிலையும் மாவட்டச் செயலகம் வழங்கவில்லை.
ஊடகவியலாளர்களால் கோரப்படுகின்ற தகவல்களையே மாவட்டச் செயலகம் வழங்காது சட்டத்தை உதாசீனம் செய்கிறது என்றால் மக்கள் கோருகின்ற தகவல்களுக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது.