குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் – கட்டுக்கரை குளத்து நீரினைப் பயன்படுத்தி இம்முறை சுமார் 1,710 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரச நெற்செய்கைக் காணிகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினரால் சிறுபோக செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.2009ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டுக்கரைக் குளத்தின் நீர் மட்டத்திற்கேற்ப, மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சிறுபோக நெற்செய்கைக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
எனினும், அதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தினரால் புதிய நடைமுறை மூலம் வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.18 ஏக்கருக்கு ஒரு ஏக்கர் வீதம் என்ற அடிப்படையில், 72 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை பண்ணும் விவசாயி ஒருவருக்கு நான்கு ஏக்கர் சிறுபோக வயல் காணிகள் வழங்கப்படவுள்ளன.
எனினும், 18 ஏக்கருக்கு குறைந்த பெரும்போக நெற்செய்கை செய்யும் விவசாயிகளுக்கும் வயல் காணிகளற்ற நிலையில் குத்தகை அடிப்படையில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் சிறுபோக காணிகள் வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறான காணி பகிர்ந்தளிப்பு நடைமுறையே கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுவதால், ஏழை விவசாயிகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிறுபோக நெற்செய்கை காணி பகிர்ந்தளிப்பில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி செல்வந்த விவசாயிகள் தொடர்ந்தும் நன்மைகளை அனுபவிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
18–1 என்ற வீதம் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கான காணி வழங்கப்படுவது தொடர்பில், விவசாய அமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எட்டப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
#மன்னார் #சிறுபோக நெற்செய்கை #காணிகள் #அநீதி #mannar