உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கையின் பயிற்றுவிப்பாளர் குழுவில் பங்கெடுக்கும் வாய்ப்பை கிரிக்கெட் அரசியல் காரணமாக நிராகரித்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
பயிற்றுவிப்பாளர் குழுவில் பங்கெடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் இலங்கை கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வாவாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்
எனினும் வேறு சில கடமைகள் இருந்ததாகவும், தான் ஆற்ற வேண்டியதென எதிர்பார்க்கப்படும் வகிபாகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்த மகேல முழு அமைப்பிலும் தான் கருத்துக் கூற முடியாவிட்டால் தந்திரோபாய ரீதியாகவோ அல்லது எவ்வாறோ தான் பங்கெடுப்பதில் அர்த்தமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமாலின் தலைமைத்துவங்களை கடுமையாக விமர்சித்த மகேல ஜெயவர்த்தன கிரிக்கெட் அரசியலுக்குள் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், லசித் மலிங்கவிடமிருந்து அணித்தலைமைப் பதவி பறிக்கப்பட்டமை குறித்தும் விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் அமைப்பை மாற்றுவதற்குரிய திட்டங்களை மகேல ஜெயவர்தன முன்பு தயாரித்திருந்த போதும், அந்த முன்மொழிவுகள் இலங்கை கிரிக்கெட் சபையால் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
#இலங்கை # மகேல ஜெயவர்தன #icc #mahela jeyawardena