சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் பெங்களூரு சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ள சசிகலா மீதான வழக்கு விசாரணையை ஜூலை 16ஆம் திகதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அவர்மீது தொடரப்பட்டுள்ள அந்நியச் செலாவணி வழக்கில் ஜெ.ஜெ. ரிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை நேரில் முன்னிலையாகுமாறு எழும்பூர் நீதிமன்றம் கடந்த மே 2ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
எனினும் உடல்நலக் குறைவு காரணமாக நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டு சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சசிகலா காணொலி காட்சி மூலம் முன்னிலையாக அனுமதி வழங்கி மே 13ம் திகதி முன்னிலையாகுமாறு உத்தரவிட்ட போதும் சசிகலா அன்றையதினம் முன்னிலையாகவில்லை .
இந்த நிலையில் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கு ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்காக விசாரணையை ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#சசிகலா #வழக்கு விசாரணை