நாட்டின் அரசியல் அமைப்பும்,சட்டமும் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும் தமிழ்,முஸ்லீம் மக்களுக்கு ஒருவிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு வழங்கிய கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்போதைய சூழலில் பொது பலசேனாவின் ஞானசார தேரர் அவர்களை பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுதலை செய்தமையை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லாம் தேர்தல் மயம். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை நீதிமன்றத்தில் நீதிபதியின்முன் மிரட்டியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தொன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர் ஒன்பது மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் என்ன குற்றத்திற்காகச் சிறையில் இருக்கிறோம் என்பதே தெரியாத பல தமிழ் அரசியல் கைதிகள் இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இவ் நாட்டின் அரசியல் அமைப்பும்,சட்டமும் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும் தமிழ்,முஸ்லீம் மக்களுக்கு ஒருவிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் இதைப்போல் பல உதாரணங்களை சுட்டிக்காட்டமுடியும். அதே நேரம் நீதி அமைச்சர் தேரர்கள் சாதாரண நீதிமன்றங்களின் வாயிற்படியை மிதிப்பதை என்னால் சகிக்க முடியவில்லை என்றும் அவர்களுக்காக தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கூறுகிறார்.
பௌத்தமதத் துறவிகள் குற்றம் செய்யாதிருக்க வேண்டும் என்பது அவரது வேண்டுகோள் அல்ல. மாறாக குற்றம் செய்த பிக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் அமைப்பதே அவரது விருப்பமாக உள்ளது. இதிலிருந்து இந்த நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதிகளைத் தவிர ஏனையோர் அடிமைகளாக வாழ வேண்டும் என்பது புலனாகிறது. ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும். என தெரிவித்தார்.
#சட்டம் #சிங்களவர் #தமிழ் #முஸ்லீம்கள் #சிவசக்தி ஆனந்தன் #ஞானசார தேரர்