148
ட்ரோன் கமராக்கள் பதிவு செய்வது தொடர்பில் காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வராதமையால் , யாழில் ட்ரோன் கமரா வைத்திருப்போர் மத்தியில் குழப்பமான நிலைமை காணப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவங்களை அடுத்து ட்ரோன் கமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்நிலையில் இந்த மாத ஆரம்பத்தில் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ட்ரோன் கமராக்களை வைத்திருப்போர் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்தினர் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அதனை அடுத்து ட்ரோன் கமராக்கள் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று கமராக்களை பதிவு செய்ய முயன்ற போது தமக்கு அது தொடர்பில் எந்த விதமான அறிவுறுத்தலும் கிடைக்க பெறவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அதன் போது கமரா உரிமையாளர்கள் பத்திரிகை செய்தி குறிப்பை காட்டி இராணுவத்தினர் கோரியுள்ளனர் என எடுத்து கூறிய பின்னர் சில காவல் நிலையங்களில் பதிவுகளை மேற்கொண்டனர். பல காவல் நிலையங்களில் பதிவுகள் எதனையும் மேற்கொள்ளாது உரிமையாளர்களை பொலிசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறிப்பாக கோப்பாய் காவல் நிலையத்தில் ட்ரோன் கமராக்கள் தொடர்பில் சிறுகுற்ற பிரிவில் முறைப்பாட்டு வடிவத்தில் காவல்துறையினர் பதிவுகளை மேற்கொண்டு முறைப்பாட்டு துண்டினை உரிமையாளரிடம் கையளிக்கின்றனர்.
யாழ்ப்பாண காவல் நிலையத்தில் , தமக்கு ட்ரோன் கமராக்களை பதிவு செய்யுமாறு எந்தவிதமான அறிவுறுத்தலும் வரவில்லை. அதனால் ட்ரோன் கமராக்களை பதிவு செய்ய வரும் உரிமையார்களின் பெயர் விபரம் மற்றும் கமராவின் விபரம் என்பவற்றை பதிவு செய்கிறோம் என கூறி அதனை வெற்று தாளில் பதிவு செய்தனர். கமராவை பதிவு செய்தமைக்குரிய எந்த ஆவணமும் கமரா உரிமையாளர்களிடம் பொலிசார் கையளிக்க வில்லை.
ட்ரோன் கமராக்கள் பதிவு தொடர்பில் காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வராதமையால் காவல்துறையினர் பதிவுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றார்கள். அதனால் கமரா உரிமையாளர்கள் மத்தியிலும் குழப்பம் காணப்படுகின்றது. எனவே அது தொடர்பில் உரிய தரப்பினர் உரிய தகவல்களை வழங்க வேண்டும் என ட்ரோன் கமரா உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
#ட்ரோன் கமராக்கள் #பதிவு
Spread the love