வடமராட்சி அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் பலியான மக்களின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (29) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் உயிரிழந்த பொதுமக்களின் ஆத்மா சாந்தி பிராத்தனை வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘ஒப்பிரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராட்சி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் 29.05.1987ஆம் ஆண்டு மீது இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர் . பலர் படுகாயமடைந்தனர்.
அதில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் உரிமை கோரப்படாத பதின்மூன்று சடலங்கள் உள்ளிட்ட சிதைவடைந்து உருக்குலைந்து போயிருந்த பலரது உடல் சிதைவுகளையும் ஓரிடத்தில் போட்டு ஆலய நிர்வாகத்தினரால் எரியூட்டப்பட்டிருந்தது.
இத்துன்பியல் சம்பவத்தின் 32ஆவது ஆண்டை முன்னிட்டு வடமராட்சி மக்கள் சார்பில் அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில், ஆத்மா சாந்தி வேண்டி வழிபாட்டு நிகழ்வு நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நெய்த் தீபம் ஏற்றி நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #வடமராட்சிஅல்வாய்முத்துமாரிஅம்மன்ஆலயம் #ஒப்பிரேசன் லிபரேசன் #எறிகணைத்தாக்குதல்கள் #பலியானமக்கள்