இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று 30ம் திகதி இரண்டாவது தடவையாக பதவியேற்கவுள்ளார். இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது.
பதவியேற்பு வைபவத்தின் முதல் நிகழ்வாக, முன்னாள் பாரதப் பிரதமர் அடல் விஹாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தவுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் அதில், பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இந்தநிலையில், இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். மோடியை தொடர்ந்து அமைச்சர்களாக பதவியேற்கும் 60 அமைச்சர்களுக்கும் ராம்நாத் கோவிந்த் இரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் நினைவிடம் மற்றும் போர் வீரர்களின் நினைவிடத்திலும் மோடி அங்சலி செலுத்தவுள்ளார்.
இதேவேளை பதவியேற்பு விழாவுக்கு இலங்கை பங்களாதேஷ், கிர்கிஸ்தான், மொரீசியஸ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் பாகிஸ்தான் , சீனா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#நரேந்திர மோடி #பதவியேற்கின்றார் #அமைச்சரவை #பாகிஸ்தான் #சீனா