தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர்…
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப்போகின்றது என்ற காரணியை பாதுகாப்பு செயலாள ருக்கும், காவற்துறை மா அதிபருக்கும் எடுத்துக் கூறிய போதிலும் அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
தாக்குதல் நடத்தப்படும் வரையில் பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கூட்டவில்லை என்று தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
சஹ்ரான் குறித்த தகவல்களையும் சிரியா சென்றவர்கள் இலங்கைக்கு வருகின்றார்கள் கைது செய்து விசாரிக்கலாம் என்றும் பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தினேன் ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு நேற்று காலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நாட்டில் இல்லாத காரணத்தினால் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன தலைமையில் நேற்றைய கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்ட தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரிவுக்குழு முன்னால் சாட்சியமளிக்கையில் இந்த தகவல்களை கூறினார்.
இங்கு அவர் மேலும் சாட்சியமளிக்கும்போது, இலங்கையில் தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்று 7 ஆம் திகதி எனக்குக் கிடைத்தது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்ற விபரங்கள் அதில் இருக்கவில்லை. ஆனால் மத தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயம் ஆகியன தாக்கப்படவுள்ளதாக அதில் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவலை ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி காலை 11 மணிக்கு பாதுகாப்பு செயலாளருக்கு தெரியப்படுத்தினேன். அந்த நாளில் (8 ஆம் திகதி) இந்திய பாதுகாப்பு செயலாளர் இலங்கைக்கு வந்திருந்தார். அன்றைய தினம் எமது பாதுகாப்பு செயலாளருக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் காலையில் 10 மணியளவில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அந்த சந்திப்பு நண்பகல் வரையில் நீடித்தது. ஆகவே அன்றைய தினம் என்னால் பாதுகாப்பு செயலாளரை சந்திக்க முடியவில்லை. ஆனால் தகவலை கொடுத்திருந்தேன். அடுத்த நாள் 9 ஆம் திகதி தேசிய புலனாய்வுப் பிரிவின் கூட்டம் இடம்பெற்றது. இதில் இந்த தாக்குதல் குறித்த தகவல் தொடர்பில் முக்கியமாகவும் பிரதானமாகவும் பேசியிருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் இது குறித்து பேசப்படவே இல்லை.
மீண்டும் நினைவூட்டினேன்
அந்த கூட்டத்தில் என் அருகில் பாதுகாப்பு செயலாளர் இருந்தார். ஆகவே நான் எனது கோப்புகளுக்கு மேல் இந்த கடிதம் குறித்த அறிக்கையை வைத்திருந்து இது குறித்து பேச வேண்டும் என பாதுகாப்பு செயலாளருக்கு தெரிவித்தேன். அதனை ஏனையவர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் இதனை காவற்துறை மா அதிபருக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் நீங்களும் ஒருமுறை நினைவுபடுத்தி விடுங்கள் என்று கூறி சாதாரணமாக அதனை தட்டிக்கழித்தார். அதன் பின்னர் இந்த பிரதியொன்றை காவற்துறை மா அதிபருக்கும் நான் வழங்கினேன்.
அதன் பின்னர் இந்த விடயம் குறித்து எவரும் அக்கறை கொண்டதாக எனக்கு தெரியவில்லை. என்னிடம் இது குறித்து எவரும் வினவவும் இல்லை. காவற்துறை மா அதிபர் தகவலை அறிந்திருந்த காரணத்தினால் நான் அதன் பின்னர் அவரிடம் வினவவும் இல்லை. ஆனால் நான் காவற்துறை மா அதிபருக்கு வழங்கிய கடிதத்தில் (eyesolny) என்று குறிப்பிட்டு அனுப்பினேன்.
இந்த வார்த்தை ஒரு இரகசிய குறியீடாக நாம் பயன்படுத்தும் ஒன்றாகும். இந்த விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் என்று இதற்கு அர்த்தம். ஆனால் அதன் பின்னர் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படும் வரையில் இது குறித்து பேசவும் இல்லை. தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் ஒன்று கூட்டபடவும் இல்லை. பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு குழுக் கூட்டத்தை கூட்டவில்லை.
உண்மையை கூறவேண்டும் என்றால் வாரத்திற்கு ஒரு தடவை பாதுகாப்பு சபைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். ஆனால் மாதம் ஒன்று என்ற வகையில் தான் பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூடியது. தாக்குதல் நடத்தப்பட முன்னர் இறுதியாக இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதியே பாதுகாப்பு சபைக் கூட்டம் கூடியது. அதன் பின்னர் 22 ஆம் திகதி அதாவது தாக்குதல் இடம்பெற்ற அடுத்த நாள் ஜனாதிபதி தலைமையில் கூடியது. தாக்குதல் நடந்துள்ளது. யார் நடத்தியது என்ற காரணிகள் மாத்திரம் பேசப்பட்டு வருகின்றதே தவிர உண்மையான காரணிகள் நான் கூறிய விடயங்கள் குறித்து இன்றுவரை அக்கறை செலுத்தப்பட்டதாக இல்லை.
நான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதவியை ஏற்றுகொண்டதில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு குறித்து (isis) ஆராய்ந்து வருகின்றேன். உலகில் நடக்கும் செயற்பாடுகள் குறித்து கண்காணித்து வருகின்றேன். இலங்கையில் காத்தான்குடியில் ஒரு தாக்குதல் சம்பவம் இரு முஸ்லிம் குழுக்கள் இடையில் ஏற்பட்டது. அப்போதில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் இந்த சம்பவம் குறித்து இணைத்து பார்த்துள்ளேன்.
சிரியா சென்று வந்தோரை விசாரிக்குமாறு கோரினேன்
மேலும் இலங்கையில் சிலர் சிரியா சென்றுள்ளது கண்டறியப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகின்ற தகவல் கிடைத்தது. அவர்களை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியுள்ளேன். வாராந்தம் செவ்வாய்க்கிழமை கூடும் புலனாய்வு கூட்டத்திலும் அவ்வப்போது கூடிய பாதுகாப்பு சபைக் குழுக் கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர்களை கைதுசெய்ய சட்டம் இல்லை என்ற காரணிகள் கூறப்பட்டது. அவர்களை எவ்வாறு விசாரிப்பது என்பது குறித்து ஆராயவேண்டும் என்ற பதில் கிடைத்தது.
சஹ்ரான் குறித்தும் தகவல் வழங்கினேன்
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி இது குறித்து காவற்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்தேன். அதனை கருத்தில் கொள்ளவில்லை. சில தினங்களில் முதல் அனுப்பிய கடிதத்தை நினைவுபடுத்தி மீண்டும் கடிதம் அனுப்பினேன். ஆனால் இது குறித்து அவ்வப்போதும் பேசப்பட்டதே தவிர அதனை தாண்டிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக கூற முடியாது. அதேபோல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சஹ்ரான் குறித்து தனிப்பட்ட தகவல் ஒன்றினை தயாரித்து குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் காவற்துறை மா அதிபருக்கு தெரிவித்துள்ளேன். ஆனால் இதற்கான விசாரணைகள் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து என்னால் எதையும் தெரிவிக்க முடியாது. எனக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை என்றார். #தேசியபுலனாய்வுப்பிரிவின்தலைவர் #காவற்துறைமாதிபர் #சிசிரமென்டிஸ் #சஹ்ரான் #ISIS #சிரியா