சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, நேற்றையதினம் ; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிரேஸ்ட தலைவர் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்னவென்பதைத் தெரிவிக்கும் வகையில் சில ஆதாரங்களை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த பெப்ரவரி 15 ம்திகதி முதல் காணாமல் போயுள்ளார்
முகிலன் காணாமல் போனது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள நிலையில் 17 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் முகிலன் காணாமல்போய் 105 நாட்கள் ஆகிய நிலையில், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் முகிலன் மனைவி பூங்கொடி , பழ.நெடுமாறன், சுப்புலட்சுமி ஜெகதீசன், கோபண்ணா, கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், தி.வேல்முருகன், ஜவாஹிருல்லா உட்படப் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
உடனடியாக முகிலனைக் கண்டுபிடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பியதுடன் அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
#சுற்றுச்சூழல் ஆர்வலர் #முகிலன் #சென்னை #போராட்டம்