இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான தமிழர்கள் உள்நாட்டுப் போர் மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போதும், தமிழர்கள், பெரும்பான்மை சமூகத்தினால் தாக்கப்பட்டதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்தி வருகின்றது.
இந்த பின்னணியில் தமிழர்களுடனான யுத்தம் நிறைவடைந்து, தற்போது நாட்டில் சுமூகமான நிலை தோற்றம் பெற்ற பின்னணியில், கடந்த ஆண்டு கண்டி மற்றும் அம்பாறை ஆகிய நகரங்களில் வாழும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்த பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இதன்போது, முஸ்லிம் சமூகத்தின் சொத்துகள் சேதமாக்கப்பட்டதுடன், அவர்களின் உடமைகளும் இல்லாதொழிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் சில முஸ்லிம் இளைஞர்களும் உயிரிழந்தனர்.
இந்த பின்னணியில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் அனைத்து முஸ்லிம்களும் தொடர்புப்படவில்லை என கூறி வந்தாலும், முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் இன்றும் கட்டவிழ்த்தப்படும் என்ற அச்சத்திலேயே அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தீவிரவாதத் தாக்குதலுக்கும், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கும் தொடர்பு காணப்படுவதாக கூறி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.
இந்த போராட்டம் நான்கு தினங்கள் தொடர்ந்த நிலையில், கண்டி நகரத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதப்படுத்தப்பட்டு, அத்துரெலிய ரத்தன தேரரின் கோரிக்கைக்கு ஆதரவாக மக்கள் ஒன்று திரண்டிருந்தார்கள்.
இதன் விளைவாக நாட்டில் ஆளுநர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகித்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தமது பதவிகளை உடன் அமுலுக்குவரும் வகையில் பதவி விலகினார்கள். இந்த சம்பவங்கள் குறித்து பிபிசி தமிழ் அனைத்து தரப்பையும் தொடர்பு கொண்டு வினவியது.
அகில இலங்கை இந்து சம்மேளனம்
இலங்கையில் நிலைகொண்டுள்ள மதத் தீவிரவாதத்திற்கு மாத்திரமே எதிராக செயற்படுவதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் தெரிவிக்கின்றது. முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த சம்மேளனத்தின் தலைவர் நாரா.பி.அருண்காந்த் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கையில் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள், இஸ்லாமியவாத தீவிரவாத செயற்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான இஸ்லாமியவாத தீவிரவாதத்திற்கு எதிராகவே தாமும் களமிறங்கிய பௌத்த தேரர்களுடன் போராட்டங்களை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சில முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீது மாத்திரமே தாம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததாக கூறிய அவர், ஆனால் அனைத்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் பதவி விலகியமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் ராஜதந்திர ரீதியாக செயற்பட வேண்டிய காலம் இதுவென அருண்காந்த் குறிப்பிடுகின்றார்.
சிலோன் தௌஹித் ஜமாத்
‘ஒரு மனிதனை வாழ வைத்தவன், முழு மனித சமூகத்தையே வாழ வைத்தவனாக கருதப்படுகின்றான், ஒரு மனிதனை கொலை செய்தவன், முழு மனித சமூகத்தையே கொலை செய்தவனாக கருதப்படுகின்றான்.”
இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்-குரான் வசனங்களின் மூலமே உறுதிப்படுத்தப்படுவதாக சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் துணை செயலாளர் எம்.எப்.எம்.ரஷ்மீன் தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒன்று கிடையாது என சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதத்திற்கு முழுமையான எதிர்ப்பை கொண்ட மார்க்கமே இஸ்லாம் எனவும் கூறுகின்றார்.
இந்த நிலையில், பேரினவாத பௌத்த பிக்குகளின் பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தீர்மானங்கள் எட்டப்படுமாக இருந்தால், அது ஜனநாயக நாடு என்ற வகையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான அடிப்படைவாதிகள் கருத்துகளை கேட்டு, செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எம்.எப்.எம்.ரஷ்மின் குறிப்பிடுகின்றார்.
அரசியலமைப்பை தாண்டி, அதிகாரங்களை ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ கைகளில் எடுக்குமாக இருந்தால், அந்த செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதேவேளை, முஸ்லிம்கள் ஒன்றிணைவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தபோதும், முஸ்லிம் சமூகம் அதனை தவறவிட்டதாக எம்.எப்.எம்.ரஷ்மின் கூறுகின்றார்.
இந்த நிலையில், நாட்டில் தற்போது கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளினால் ஒன்றிணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக விரைவில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் துணை செயலாளர் எம்.எப்.எம்.ரஷ்மீன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில். நாடாளுமன்றத்தில் தற்போது காணப்படுகின்ற 20 பிரதிநிதித்துவத்தை, 30 வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக குருநாகல், புத்தளம், களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதன் ஊடாக, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, எதிர்வரும் காலங்களில் பலம் பொருந்திய ஒரு சக்தியாக உருவெடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக எம்.எப்.எம்.ரஷ்மீன் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
கிறிஸ்தவ பாதிரியாரின் நிலைப்பாடு.
தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்தப்பட்டுள்ள பின்னணியில், எதிர்வரும் காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிச்சயம் கட்டவிழ்த்துவிடப்படும் என அருந்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மன்னாரின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களினால், இந்துக்களின் அலங்கர வளைவு பலகை சேதமாக்கப்பட்ட விவகாரத்தின் ஊடாகவே, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் சந்தர்ப்பத்தில், இந்து மற்றும் பௌத்த இனவாதிகள் ஒன்றிணைந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியுடன் தமிழர்களை தமது கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாக நம்பும் பெரும்பான்மை சமூகம், தற்போது முஸ்லிம்களை தமது கைகளுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை இன்று இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிடுகின்றார்.
பௌத்த பேரினவாத பிக்குகளின் போராட்டங்களினால் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிக்ள பதவி விலகியமையானது, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகிய பின்னணியில், ஆளுநராக முஸ்லிம் ஒருவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளமையானது, ஒரு காட்டிக் கொடுப்பாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் தற்போது இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அனைத்தும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே தாம் கருதுவதாக அருட்தந்தை சக்திவேல் பி.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டார்.#தமிழீழவிடுதலைப்புலிகள் #சிறுபான்மைசமூகம் #முஸ்லிம்சமூகம் #முஸ்லிம்இளைஞர்கள் #இனவாதம்