முல்லைத்தீவு கோட்டைக்கட்டியகுளம் பாடசாலை இரு சாதனைகளை படைத்துள்ளது. 2019ம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாகாண மட்ட எறிபந்தாட்ட போட்டியில் இச் சாதனை படைத்துள்ளார்கள்.
கடந்த மூன்றாம், நான்காம் திகதிகளில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட எறிபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியை வீழ்த்தி 17வயதுப்பிரிவினர் மாகாண சம்பியனாகவும் 20வயதுப் பிரிவினர் இறுதிப் போட்டியில் யூனியன் கல்லூரியுடன் பலமாக மோதி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பாடசாலையின் அதிபர் திருமதி. அ.கிருஷ்ணகுமாரின் ஒத்துழைப்புடன் பயிற்சிஆசிரியராக வேலாயுதம் திவாகரனின் பயிற்சியில் குறித்த பாடசாலை மாணவர்கள் அண்மையக்காலமாக விளையாட்டுக்களில் வலய, மாகாணம் தேசிய மட்டங்ளில் சாதித்து வருகின்றனர். கிராமத்து பாடசாலையின் இச் சாதனைகள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வயத்திற்குள் காணப்படும் இப் பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற கிராமமான கோட்டைக்கட்டிய குளத்தில் அமைந்துள்ளது.
இப்பாடசாலை 2017ம் ஆண்டு மாகாண மட்ட எறிபந்தாட்ட போட்டி யில் இரண்டாம் இடமும், 2018ம் ஆண்டு 17வயதுப்பிரிவினர் சம்பியனாகவும், 20 வயதுப் பிரிவு இரண்டாம் இடமும் பெற்று தேசிய எறிபந்தாட்ட போட்டி யில் நான்காம் இடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
#முல்லைத்தீவு #கோட்டைக்கட்டியகுளம் #பாடசாலை #சாதனை #எறிபந்தாட்ட போட்டி