சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தனியார் குடிநீர் நிர்வாகம் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதனால் அந்தப் பகுதி மக்கள் நிலத்தடி நீர் இல்லாமல் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கும், பூவிருந்தவல்லி தாசில்தாருக்கும் உத்தரவிடக்கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தபோது, இரவு பகல் என நாள்முழுவதும் சட்ட விரோதமாக 50க்கும் மேற்பட்ட பாரவூர்திகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய நீதிபதிகள், தண்ணீர் உறிஞ்சப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
#சட்ட விரோதமாக #நிலத்தடி நீரை #உறிஞ்சி எடுப்பதை #தடுத்து நிறுத்துமாறு #உத்தரவு