மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம்
வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (7) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு விதமான சோதனைச் சாவடிக்குள் துன்ப துயரத்தை அனுபவித்த தமிழ் மக்களுக்கு மீண்டும் ஏன் இந்த வேதனையான சோதனை?
கடந்த ஈஸ்டர் தாக்குதலில் வடக்கில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்பது தாங்கள் அறிந்ததே. அப்படியானால் ஏன் இங்கே அடுக்கடுக்கான சோதனைச் சாவடிகள்.
வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா?
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இவ்வாறான நெருக்கடிகள் இல்லை. அப்படியென்றால் இலங்கையில் இரண்டு நாடுகள் உண்டா? சட்டம் யாவருக்கும் சமமல்லவா? உங்கள் அகராதியில் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது சிறுபான்மை இனத்தவர் மட்டுமா?
தமிழர்களை சிங்கள பயங்கரவாதம், இன அழிப்புச் செய்யவில்லையா?
80முஅ பயணத்திற்கு 5 இடத்தில் சோதனைச்சாவடி. நீங்கள் ஒரு முறை சாமானிய மக்கள் போல பயணித்துப்பாருங்கள் வலி புரியும். சகல வலிகளையும் அனுபவித்து நசுக்கப்பட்டு இரண்டாம் தர பிரஜையாக வாழ வேண்டும் என்பதா?
பௌத்த தேசிய வாதத்தின் எழுதப்படாத விதி? பாடசாலைச் சோதனை மிக அருவருப்பாக உள்ளது. பாவம் மாணவர்கள்.
வெறுப்புணர்வை ஏற்படுத்தாதீர்கள். தேசிய பாதுகாப்பில் அக்கறையின்றி இந்த நாட்டில் ஒக்டோபர் 26க்கு பின்னர் இரண்டு அரசாங்கம் உள்ளதா? உங்கள் குடும்பப்பிரச்சினைப் போல் ஆளுக்காள் அரச நிர்வாகத்தில் முரண்படுவது கேலிக்கூத்தானது. அதுதான் தாக்குதலக்கு முக்கிய காரணம். எம்மை சுதந்திரமாக அன்றாடப்பணிகளில் ஈடுபட வழிவகுங்கள்.
அடக்குமுறை விபரீதத்தையே ஏற்படுத்தும். மனகிலேசத்தை வலிமைப்படுத்தும். பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுங்கள். எல்லா இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளாக நோக்காதீர்கள். இந்த சோதனைச்சாவடிகளால் ஏதாவது ஒரு பயன் கிடைத்ததா? பயங்கரவாதிகளும், வன்முறையாளர்களும் பகிரங்கமாக பொதுவெளியில் நடமாடுவார்களா? பலவீனமான புலனாய்வு கட்டமைப்பும், ஒழுங்கற்ற உழல் நிர்வாக கட்டமைப்பும் தான் இந்த நாட்டில் உள்ளது. அதை முதலில் சீர் செய்யுங்கள். எனவே சோதனைச்சாவடிகளை குறையுங்கள். யுத்தத்தால் துன்பப்பட்ட மக்களை வருத்தாதீர்கள்.
இராணுவ நெருக்கடியிலிருந்து மக்களை விடுவியுங்கள். சனநாயக சிவில் இடைவெளியை மழுங்கடித்து விட்டீர்கள். ஆகவே எமது வேண்டுகையை சாதகமாக பரிசீலிக்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். #மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் #ஈஸ்டர்தாக்குதல் #மைத்திரிபாலசிரிசேன