அடிப்படை வசதியும் அங்கீகாரமும் இன்றிச் செயல்பட்டுவரும் 903 பாடசாலைகளுக்கு கட்டளை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் செயல்படும் தனியார் பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், இப்பகுதிகளில் உள்ள தனியார்ப் பாடசாலைகளில்; கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடப்பதில்லை என்பதுடன் போதுமான ஆசிரியர்கள் மற்றும் கட்டட , கழிப்பறை வசதிகள் இல்லாமல் செயல்பட்டுவருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இது குறித்து தமிழக அரசிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் எனவே அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த மனு நேற்றையதினம் விசாரணைக்கு வந்தத போதே 903 பாடசாலைகளுக்கு கட்டளை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள் அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகக் கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
#அடிப்படை வசதிகளற்ற #பாடசாலைகளுக்கு #கட்டளை #தமிழக அரசு