203
மயூரப்பிரியன் –
சிறையில் உள்ள கணவனை மீட்டெடுக்கவே வயோதிப பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டி , கொலை செய்து , அவருடைய நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டேன் என பிரதான சந்தேக நபரான குடும்ப பெண் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தெல்லிப்பளை பகுதியில் கடந்த மாதம் 06ஆம் திகதி , சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது 70) எனும் பெண் கொலையுண்ட நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரின் வீட்டில் இருந்த 12 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
விசாரணைகள் ஆரம்பம்.
குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் புத்தி உடுகம சூரிய தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவரின் கீழ் மூன்று காவற்துறை விசாராணை குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
முன்னதாக சடலத்தை முதலில் கண்டு காவற்துறையினருக்கு தகவல் வழங்கியவரும் அயல் வீட்டருமான பெண் மணியிடம் இருந்து காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அயல் வீட்டாரின் வாக்கு மூலம்.
அயல் வீட்டாரான நான் கமலாதேவியை பார்க்க சென்றிருந்தேன். வீட்டு கேற் வாசலில் நின்று பல தடவைகள் அவரை அழைத்து பார்த்தேன். சத்தத்தை காணவில்லை. பின்னர் கேற்றை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டு கதவு திறந்த நிலையில் விறாந்தையில் நித்திரை போல் படுத்திருந்தார். அருகில் சென்றும் கூப்பிட்டு பார்த்தேன். எந்த அசமந்தமும் தெரியவில்லை. அதனால் அவரை தொட்டு எழுப்ப முயன்றேன். அப்போதே அவர் உயிரிழந்துள்ளமை எனக்கு தெரிந்தது. அது தொடர்பில் உடனடியாக தெல்லிப்பளை பொலிசாருக்கு அறிவித்தேன் என தெரிவித்தார்.
பெண்ணொருவர் வந்ததை அவதானித்தேன்.
கொலையானவரின் வீட்டுக்கு யாரேனும் வந்து போனதை அவதானித்தீர்களா ? என பொலிசார் கேட்ட போது , முதல் நாள் ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணொருவர் கமலாதேவியின் வீட்டுக்கு சென்றதை அவதானித்ததாகவும் , அவர் யார் ? ஏன் சென்றார் ? எப்ப கமலாதேவியின் வீட்டில் இருந்து சென்றார் ? போன்ற எந்த தகவலும் தனக்கு தெரியாது என பொலிசாரிடம் தெரிவித்தார்.
கமலாரானியின் வீட்டுக்கு ஒரு பெண் வந்து சென்ற பின்னரே கொலை நடந்துள்ளது. எனும் ஒரு தகவலை வைத்து பொலிசார் விசாரணைகளை தீவிரப்படுத்தினார்கள்.
கையடக்க தொலைபேசி தொடர்பில் விசாரணை.
அதேவேளை கமலாரானியின் வீட்டில் இருந்து கொள்ளையர்களால் எடுத்து செல்லப்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முடுக்கிவிட்டிருந்தனர். குறித்த தொலைபேசியானது கொலையானவரின் வீட்டில் இருந்து சற்று தூரத்தில் (off செய்யப்பட்டது) துண்டிக்கப்பட்டுள்ளது. என்பதனை காவற்துறையினர் கண்டறிந்து அப்பகுதியில் உள்ள (CCTV) மறை காணிகளை சோதனையிட ஆரம்பித்தனர்.
பிரதான சந்தேகநபரான பெண் அடையாளம் காணப்பட்டார்.
அதன் போது ஓர் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த (CCTV) மறைகாணியில் இரவு வேளை இரண்டு துவிச்சக்கர வண்டியில் நால்வர் பயணிப்பதனை காவற்துறையினர் அவதானித்தனர். அதில் ஒருவர் பெண் என்பதனையும் அவதானித்தனர். அந்த பெண், கொலையானவரின் வீட்டுக்கு வந்த பெண்ணாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் அந்த நால்வரை அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பெண் தலைமறைவு – சகோதரர்கள் கைது.
விசாரணைகளின் அடிப்படையில் அந்த பெண்ணின் விபரங்களை காவற்துறையினர் பெற்றனர். அதனடிப்டையில் அவர் தங்கியுள்ள வீட்டிற்கு காவற்துறையினர் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதனை அடுத்து வீட்டில் இருந்த பெண்ணின் சகோதரனிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த போது, நகைகள் உருக்கப்பட்டு அவை தங்க கட்டிகளாக மாற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை தங்க கட்டிகளை காவற்துறையினர் அவரிடம் இருந்து மீட்டனர்.
குறித்த தங்கம் தனது சகோதரி, தனது மற்றைய சகோதரனிடம் கொடுத்து உருக்கியதகவும் அதனையே தான் வைத்திருந்ததாகவும் அவர் காவற்துறை விசாரணையில் தெரிவித்தார்.
அதனை அடுத்து, கொலை சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தமை, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கியமை, அதற்கு உதவியமை மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தமது உடமையில் வைத்திருந்தமை ஆகிய குற்ற சாட்டின் கீழ் பிரதான சந்தேக நபரான பெண்ணின் சகோதரர்கள் இருவரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களையும் காவற்துறையினர் நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டது.
பிரதான சந்தேக நபர் கைது
பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கும், அவருடன் அன்றைய தினம் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஏனைய மூவர் தொடர்பிலும் காவற்துறையினர் விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தீவிர படுத்தினர்.
அந்நிலையில் ஒரு வார கால பகுதிக்கு பின்னர் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதாக காவற்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து அங்கு விரைந்த காவற்துறையினர் வீடொன்றில் இருந்து பிரதான சந்தேக நபர், கொலைக்கு உதவிய ஏனைய இருவர் என மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, ஒருவர் அப்பெண்ணின் தந்தை எனவும் , மற்றையவர் பெண்ணின் மகன் என்பதனையும் பொலிசார் அறிந்து கொண்ட போது அதிர்ச்சியடைந்தனர். ஒரு குடும்பமாக சேர்ந்து வயோதிப பெண்ணை கொலை செய்து அவரின் நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளனர். அத்துடன் அவர்களுடன் இணைந்த மற்றைய நபரையும் காவற்துறையினர் கைது செய்தனர்.
கணவரை மீட்கவே கொலை செய்தேன்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது ,
தனது கணவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை சிறையில் இருந்து மீட்பதற்கு எனக்கு பெரிய தொகை பணம் தேவைப்பட்டது. அதனாலேயே இக்கொலையை செய்து பணத்தினையும் நகைகளையும் கொள்ளையிட்டேன் என தெரிவித்துள்ளார்.
கிடுகு பின்ன போனேன்.
அத்துடன் அச் சம்பவம் குறித்து தெரிவிக்கையில் ,
வயோதிப பெண் கொலையுண்ட தினத்தில் மாலை வேளை அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். தான் கிடுகு பின்னும் தொழில் செய்து வருமானம் ஈட்டி வருவதாகவும் , கிடுகு பின்ன இருந்தால் தாருங்கள் என கேட்டேன். அவர் தன்னிடம் கிடுகுகள் பின்ன இல்லை எனவும், கறிபுளியில் இருந்து அதன் கொட்டைகளை நீக்கி தா பணம் தருகிறேன் என்றார். நான் அவற்றை நீக்கி கொடுத்தேன்.
பின்னர் அருகில் உள்ள வீட்டில் இருப்போருக்கும் அந்த வேலையை செய்து கொடு அவர்களும் பணம் தருவார்கள் என்றார். அதற்கு நானும் உடன்பட்டு அயல் வீட்டுக்கு சென்றோம். அப்போது அவர்கள் அங்கு இல்லை.
அவ்வேளை இரவாகிவிட்டதால் , எனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் தன் வீட்டில் தங்கி இருந்து விட்டு நாளை காலை அயல் வீட்டில் அந்த வேலையை செய்து கொடுத்து விட்டு போகுமாறு கேட்டார். நானும் அதற்கு உடன்பட்டேன்.
அவர் வீட்டில் தங்கியிருந்த வேளை அவர் வீட்டில் தனியாக இருப்பதனையும் அவரிடம் நகைகள், பணம் என்பன இருப்பதனையும் அறிந்து அவற்றை கொள்ளையடிக்க எண்ணினேன்.
அதற்கு உதவிக்கு எனது தந்தைக்கும், மகனுக்கும் போனில் வீட்டு விலாசம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினேன். அதனை அடுத்து வீட்டிற்கு எனது தந்தை, மகன் மற்றுமொரு இளைஞன் ஆகியோர் துவிச்சக்கர வண்டியில் வந்தனர். அப்பெண் தூங்கும் வரையில் அவர்கள் வீட்டு வளவினுள் மறைந்திருந்தனர். அவர் தூங்கியதும் வீட்டு கதவினை திறந்து அவர்களை உள்ளே அழைத்தேன்.
தூங்கிகொண்டிருந்த அந்த வயோதிப பெண்ணின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி அவரை கொலை செய்தோம். அதன் பின்னர் அவர் படுக்கையில் நித்திரை கொள்வது போன்று கிடத்தி விட்டு அவரது வீட்டினை நால்வருமாக சேர்ந்து சல்லடை போட்டு தேடுதல் நடாத்தி. அவரின் நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றோம் என விசாரணையின் போது தெரிவித்தார்.
உதவி செய்து, நம்பிக்கை அடிப்படையில் வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்த வயோதிப பெண்ணை தனது தந்தை மற்றும் மகனுடன் சேர்ந்து கொலை செய்து நகை பணம் என்பவற்றை ஒரு பெண் கொள்ளையிட்டுள்ளார் என்பதனை காவற்துறையினர் அறிந்த போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
குறித்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான பெண்ணின் இரத்த உறவுகளான தந்தை, இரு சகோதர்கள் மற்றும் மகன் என ஐவர் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அப்பெண்ணின் கணவன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள நிலையில் இவர்களும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. #சிறை #கொலை #காங்கேசன்துறை #காவற்துறையினர்
Spread the love