வெனிசூலா மற்றும் கொலம்பிய நாடுகளுக்கிடையிலான எல்லை 4 மாதங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து குறித்த எல்லையினை மூடுமாறு, வெனிசூலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதனால், வெனிசூலா மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டதுடன் பலர் நாட்டை விட்டும் வெளியேறியிருந்தனர். இந்த நிலையில் தற்போது எல்லை திறக்கப்பட்டுள்ள நிலையில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெனிசூலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த வெனிசூலா மக்களை மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்திருந்தார்.
இதனையடுத்தே , நாட்டிற்குள் வெளிநாட்டு சக்திகள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்து ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ இவ்வாறு எல்லைப் பகுதிகளை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#queue #Venezuela #Colombia #வெனிசூலா #கொலம்பிய எல்லை #மீளத் திறப்பு #நீண்டவரிசை #காத்திருப்பு